கோல்கட்டா : “”தேர்தலில் கறுப்பு பணத்தை செலவிடுவதாக என் மீது, இடதுசாரி கட்சியினர் பழி சுமத்துகின்றனர். சூடு அதிகரித்து விட்டதால் இப்படி உளறுகின்றனர்.
சூட்டை தணிப்பதற்கு, வெள்ளரிக்காயும், ஐஸ் வாட்டரும் சாப்பிடுவது அவர்களுக்கு நல்லது,” என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சியினரும், திரிணமுல் காங்கிரசும், ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி, பிரசார களத்தை சுவாரசியமாக்கி வருகின்றனர். இடதுசாரி கட்சியினர், தங்களது பிரசாரத்தின்போது,” மம்தா, ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்கிறார். கறுப்பு பணம் ஏராளமாக உள்ளதால், அதை செலவிடுவதற்காக, ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்கிறார்’ என்றனர்.
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிடம், செய்தியாளர் ஒருவர்,” மம்தா ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்கிறாரே, நீங்கள் ஏன் ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்யக் கூடாது’என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு புத்ததேவ்,” ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்யும் அளவுக்கு, எங்கள் கட்சிக்கு பணம் இல்லை’ என, கிண்டலாக கூறினார்.
மம்தாவும் இதற்கு பதிலடி கொடுத்து பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஹெலிகாப்டரில் சென்றால், பிரசாரம் 4 மணிக்குள் முடிந்து விடும். அதற்கு பின் போதிய வெளிச்சம் இருக்காது. இதனால், ஹெலிகாப்டர் தரை இறங்குவதில் பிரச்னை ஏற்படும். எனவே, பகல் நேர பிரசாரங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்கிறேன். சூரியன் மறைந்த பின், காரில் சென்று பிரசாரம் செய்கிறேன். இது தான் உண்மை. ஆனால், ஆளும் கட்சியினர், இதை திரித்துக் கூறுகின்றனர். அவர்கள் ஹெலிகாப்டர் பிரசாரம் செய்யாததற்கு காரணம் உள்ளது. ஹெலிகாப்டரில் சென்றால், பகலில் கடும் வெயிலில் பிரசாரம் செய்ய வேண்டும். வெயில் காரணமாக, அவர்கள் கட்சிக்கு கூட்டம் கூடுவது இல்லை. இதற்காகவே, ஹெலிகாப்டர் பிரசாரத்தை தவிர்க்கின்றனர்.மேலும், தற்போது வெயில் அதிகரித்து விட்டதால், சூடும் அதிகரித்து விட்டது. இதனால், இடதுசாரி கட்சியினர் உளறுகின்றனர். எனவே, சூட்டை தணிப்பதற்கு, வெள்ளரிக்காய், ஐஸ் வாட்டர் ஆகியவற்றை சாப்பிடுவது, அவர்களுக்கு நல்லது.
Leave a Reply