வேட்பாளரின் வங்கி கணக்கில் காங்., மட்டுமே பணம் டிபாசிட் செய்தது

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களின் செலவு பணத்தை, அவர்களது பெயரில், தனி வங்கி கணக்கு துவக்கி, அதில் டிபாசிட் செய்ய வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் மட்டும் இந்த அறிவிப்பை பின்பற்றி உள்ளது.

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், மேற்கு வங்க தேர்தல் முடிய, இன்னும் மூன்று கட்டங்கள் பாக்கி உள்ளன. இத்தேர்தலை முன்னிட்டு, கடுமையான விதிமுறைகளை தலைமை தேர்தல் கமிஷன் விதித்திருந்தது.

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியது. தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களில் பண நடமாட்டம் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. நடைமுறை விதிகளை கடுமையாக அமல்படுத்திய தேர்தல் கமிஷன், இந்த முயற்சியில் வெற்றி பெற்றது என்றே கூறலாம்.

தேர்தல் கமிஷன் விதித்த நடைமுறைகளில், முக்கியமானது, வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை, அவர்களது வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய வேண்டும். ஒரு வேட்பாளர், 16 லட்ச ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும் என்பது தான். இதை, காங்கிரஸ் மேலிடம் மட்டுமே கடைபிடித்திருப்பது தெரிந்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைமை, தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மேலிடம் தான் முடிவு செய்யும். எந்த செலவாக இருந்தாலும், மேலிடத்தின் அனுமதி தேவை. சிறிய சிறிய செலவுகளுக்கும், டில்லி சென்று, செலவு ரசீதுகளை சமர்ப்பித்து பணம் பெற வேண்டும். ஆனால், இம்முறை, 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, வேட்பாளரின் வங்கி கணக்கில் கட்சி மேலிடம் டிபாசிட் செய்துவிட்டது.

இதுகுறித்து, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா கூறுகையில், “முதன் முறையாக வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு பணம், அவர்களது வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தமிழக காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கூறுகையில், “கட்சியிடம் பெற்ற, 10 லட்ச ரூபாய்க்கு மேல், நான் தேர்தல் செலவு செய்து விட்டேன்’ என்கிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் கூறுகையில், “வேட்பாளர்களின் செலவுக்கு, 16 லட்ச ரூபாய் வரை வழங்கலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்தது. ஆனால், எங்களுக்கு, 10 லட்ச ரூபாய் தான் கிடைத்தது. எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட, மீத தொகையை கட்சி மேலிடம் கொடுக்குமா என்பது தெரியவில்லை’ என்கிறார்.

தேசிய கட்சிகளில் மற்றொரு கட்சியான பா.ஜ., வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களே தேர்தல் செலவுக்கான பணத்தை திரட்டி கொள்ள வேண்டும் என, கூறிவிட்டது.

இதுகுறித்து பா.ஜ., பொருளாளர் பீயுஷ் கோயல் கூறுகையில், “சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எப்போதும் கட்சி மேலிடம் பணம் வழங்காது. அவர்களே தேர்தல் செலவுக்கான பணத்தை திரட்டிக் கொள்ள வேண்டும் அல்லது மாநில தலைமையிடம் உதவியை பெறலாம்’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *