சென்னை: தர்மபுரியில் தேமுதிக வேட்பாளரை கட்சித் தலைவர் விஜயகாந்த் அடித்தது குறித்து மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் வந்துள்ளது.
இதுகுறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது கட்சி வேட்பாளர் பெயரை தவறாக கூறி விட்டார். இதை வேட்பாளர் சுட்டிக் காட்டியபோது கோபத்தில் அவரை அடித்து விட்டார் என்று சர்ச்சை எழுந்தது. இதை திமுக தரப்பு ஒரு பிரச்சார டாப்பிக்காக மாற்றி ஊர் முழுக்க பிரசாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மணிமேகலை கண்ணன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது புகாருடன் வேட்பாளரை விஜயகாந்த் அடித்தது தொடர்பான பத்திரிக்கைச் செய்திகளையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
இதை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலபதி மூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் ஏ.ஆர்.செல்வகுமார், கே.மாரியப்பன், எஸ்.பரமசிவன் ஆகியோர் விசாரித்தனர்.
அதன் பின்னர், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
விஜயகாந்த்துக்கு ஒரு நோட்டீஸ்:
இதேபோல முதல்வர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசியது தொடர்பாக விஜயகாந்த் மீது தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகார் தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு விஜயகாந்த்துக்கு ஆணையம் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
சமீபத்தில் விஜயகாந்த் மதுரை அருகே மேலூரில் பிரசாரம் செய்த போது முதல்வர் கருணாநிதி, அவரது குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாக பேசியதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
நேற்று இரவு சிதம்பரம் வந்த விஜயகாந்த், அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கினார். அப்போது புவனகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.கல்யாணம், தேர்தல் ஆணையத்தின் விளக்கம் கோரிய நோட்டீஸை விஜயகாந்திடம் அளிக்க வந்தார்.
அதை தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளங்கோ பெற்றுக் கொண்டார். இன்று மாலைக்குள் பதிலளிக்குமாறு விஜயகாந்த்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply