புதுடில்லி :ஏர்-இந்தியா விமான பைலட்கள் வேலை நிறுத்தம் காரணமாக, அந்த நிறுவனத்துக்கு 26.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மூன்றாவது நாளாக நேற்றும் ஸ்டிரைக் தொடர்ந்ததால், ஆயிரக்கணக்கான பயணிகள், கடும் அவதிக்கு ஆளாயினர்.
“சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும், ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பள உயர்வு வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 26ம் தேதி நள்ளிரவு முதல், ஏர்-இந்தியா விமான பைலட்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.ஏர்-இந்தியா நிறுவனமும், பைலட்களும், தங்களின் நிலையில் உறுதியாக இருந்ததால், மூன்றாவது நாளாக நேற்றும் ஸ்டிரைக் தொடர்ந்தது. இதனால், உள்நாட்டு விமான பயணத்துக்கான முன்பதிவை, ஏர்-இந்தியா விமான நிறுவனம் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைத்தது. மொத்தம் உள்ள 320 விமானங்களில், நேற்று 50 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.ஸ்டிரைக் காரணமாக, விமான நிறுவனத்துக்கு, நேற்று வரை 26.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஏர்-இந்தியா விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. டில்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து, தலா 10 விமானங்கள் மட்டுமே, நேற்று இயக்கப்பட்டன.ஆயிரக்கணக்கான பயணிகள், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் குவிந்திருந்தனர். குறித்த நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாததால், இவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். சில பயணிகள், தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு, வீடு திரும்பினார். மேலும் சில பயணிகள், வேறு தனியார் விமானங்கள் மூலமாக, செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றனர்.
ஸ்டிரைக்கால், பயணிகளுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, ஏர்-இந்தியா விமான நிறுவனம் நேற்று முழு வீச்சில் களம் இறங்கியது. அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய, பெரிய விமானங்கள், மும்பை மற்றும் டில்லியிலிருந்து இயக்கப்பட்டன. இது தவிர, மேலும் சில சிறப்பு விமானங்களையும் ஏர்-இந்தியா நிறுவனம் இயக்கியது.இருந்தபோதும், பயணிகளின் தேவைக்கேற்ப, விமானங்களை இயக்க முடியவில்லை.பைலட்களின் ஸ்டிரைக்கை சமாளிக்கும் நடவடிக்கைகளில், இந்திய ரயில்வே துறையும் முடுக்கி விடப்பட்டது. டில்லி – மும்பை, டில்லி – கோல்கட்டா, டில்லி – ஐதராபாத், சென்னை – பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
கோர்ட் அதிரடி: ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்புக்கு, ஏர்-இந்தியா நிறுவனம் நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, பைலட்கள் கூட்டமைப்பு சார்பில், டில்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி முரளிதர், “வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பை தடை செய்து, ஏர்-இந்தியா நிறுவனம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது’ என உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக பைலட் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, வரும் ஜூலை 16ம் தேதிக்குள் பதிலளிக்க கோரி, ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணையும், ஜூலை 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, “ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டாம்’ என, பைலட்களுக்கு, டில்லி ஐகோர்ட் ஏற்கனவே விதித்திருந்த உத்தரவை, பைலட்கள் மீறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை, கோர்ட் அவமதிப்பு வழக்காக கருதி, விசாரணை நடத்தவும், ஐகோர்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.கெடு: ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள பைலட்கள், நேற்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, ஏர்-இந்தியா நிறுவனம் கெடு விதித்திருந்தது. இருந்தாலும், இந்த கெடுவை பொருட்படுத்தாமல், பைலட்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
Leave a Reply