சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு சென்னையில் கடந்த 2 நாட்களில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது.
அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் வீட்டில் தங்கம் குவியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த தினத்தில் தங்கம் வாங்கும் மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மோகத்தை நகைக் கடைக்காரர்களும் தங்கள் விளம்பரங்கள் மூலம் அதிகரிக்கின்றனர்.
இதனால் இந்த நாளில் நகைக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட்டு விற்பனை நடத்த வேண்டிய அளவுக்கு கூட்டம் குவிகிறது. குறிப்பாக பெண்கள் கூட்டம் மிக மிக அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டு வியாழன், வெள்ளிக்கிழமை அட்சய திருதியை கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏதோ இலவசமாக தங்கம் கொடுப்பது போல மக்கள் முண்டியத்து, வாங்கிச் சென்றனர்.
சென்னை நகைக் கடைகளில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையைவிட 10 சதவீதம் அதிகமாகும்.
நகைக் கடைகளில் மட்டுமல்லாமல் வங்கிகளிலும் தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் வாங்கவும் பெரும் கூட்டம் கூடியது. இதனால் பல வங்கிகளில் சிறப்பு கெளண்ட்டர்கள் திறக்கப்பட்டன.
இந் நிலையில் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கொஞ்சம் குறைந்தது. பவுன் ரூ.16,272க்கு விற்றது. இது வியாழக்கிழமை விலையைவிட ரூ.216 குறைவு. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,034 ஆக இருந்தது.
இந்த தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தையில் தங்க நகை ரிடெய்லர்களின் பங்கு விலைகளும் 10 சதவீதம் வரை உயர்ந்தன.
Leave a Reply