அட்வகேட் ஜெனரலாக நவநீதகிருஷ்ணன் நியமனம்

posted in: கோர்ட் | 0

சென்னை: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, வக்கீல் நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக வி.எஸ்.சேதுராமன், எஸ்.கோமதிநாயகம், கே.செல்லபாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவுக்காக, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி வருபவர் வக்கீல் நவநீதகிருஷ்ணன். சென்னை சி.பி.ஐ., கோர்ட்டில் விசாரணையில் உள்ள ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்த நாள் பரிசு வழக்கு, செல்வ வரி கணக்கு தாக்கல் செய்யாததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கிலும் இவர் தான் ஆஜராகி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள பொன்னப்பூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். பூண்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி., பட்டம், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டம், சைபர் கிரைம் மற்றும் சட்டத்தில் முதுகலை பட்டயப் படிப்பு படித்துள்ளார். 1981ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். தஞ்சாவூரில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டின் சிறப்பு அரசு குற்றவியல் வக்கீல்; சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீலாக பணியாற்றினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினராகவும் பதவி வகித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள வி.எஸ்.சேதுராமன், தஞ்சாவூர் மாவட்டம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர். கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியில் பி.எஸ்சி., பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் முடித்தார். 1976ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர், மத்திய அரசு கூடுதல் வக்கீலாக பணியாற்றியவர். அ.தி.மு.க., வக்கீல் அணித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் கிராமத்தில் பிறந்தவர் எஸ்.கோமதிநாயகம். 1983ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். அரசு குற்றவியல் வக்கீல், சிறப்பு அரசு குற்றவியல் வக்கீல், சிறப்பு அரசு பிளீடர் பதவிகளை வகித்தவர். மத்திய அரசு கூடுதல் வக்கீலாகவும் பணியாற்றினார். ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார். தமிழ் அறிஞர் மீ.ப.சோமு, இவரது மாமனார். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் கே.செல்லபாண்டியன்; வயது 64. சீனியர் வக்கீலாக உள்ளார். 1973ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். கூடுதல் அரசு குற்றவியல் வக்கீலாக பணியாற்றியுள்ளார். ஐகோர்ட் நீதிபதி பதவிக்கு 2005ம் ஆண்டு சிபாரிசு செய்யப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் சேதுராமன், கோமதிநாயகம். மதுரை ஐகோர்ட் கிளையில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லபாண்டியன் பணியாற்றுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *