அணு மின் நிலையங்களை இழுத்து மூடும் ஜெர்மனி!

posted in: உலகம் | 0

பெர்லின்: அடுத்த 11 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் இழுத்து மூட ஜெர்மனி முடிவு செய்துள்ளது.

மேலும் இனிமேல் புதிதாக எந்த அணு மின் நிலையத்தையும் அமைப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.

இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022க்குள் மூடி விட முடிவு செய்துள்ள அந் நாட்டுப் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார்.

அந் நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் கூறுகையில், இந்த முடிவு இறுதியானது, மாற்றப்படாதது. நாட்டில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பழைமையான 8 அணுமின் நிலையங்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படும். 6 அணுமின் நிலையங்கள் 2021ம் ஆண்டிலும், 3 அதி நவீன அணுமின் நிலையங்கள் 2022ம் ஆண்டிலும் மூடப்படும் என்றார்.

ஜெர்மனியின் 23 சதவீத மின் தேவையை 17 அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அணு மின் நிலையங்களை மூடுவதால் ஏற்படும் மின் உற்பத்தியின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு (renewable enetrgy) ஜெர்மனி மாற வேண்டியுள்ளது. இதற்காக எரிசக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *