காஞ்சிபுரம் : “”இட ஒதுக்கீடு மட்டும் ஒருவரை உயர்த்தாது. ஒதுக்கீட்டுடன் உழைப்பும் இருக்க வேண்டும்.
உழைப்பதற்கு நிலம் வேண்டும். அரசிடம் நமது உரிமைகளைப் போராடி பெற வேண்டும். அதற்காகவே, “அறிவுப் புரட்சியில் அமைதி காண்போம்’ என்ற வழியில் நாம் செல்ல வேண்டும்,” என சமூக சமத்துவப்படை நிறுவனர் சிவகாமி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த கூரம் கேட் பகுதியில், சமூக சமத்துவப்படை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, மே தின விழா ஆகியவை பஞ்சமி நில மீட்பு நாளாக அறிவிக்கப்பட்டு மாநாடு நடத்தப்பட்டது.
மாநாட்டில், கட்சியின் நிறுவனர் சிவகாமி பேசியதாவது:மின் தடை இருக்கும்போதே பல கட்சிகள் மிக்சி, கிரைண்டர் தருகிறோம் என்கின்றன. கடந்த தேர்தலில் கங்கவல்லி தொகுதியில் போட்டியிட்டேன். அப்பகுதி மக்களிடம் என்னை அறிமுகப்படுத்தி பேசியவர்கள், இவர் கலெக்டராக இருந்தவர். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். உங்களுக்காக கலெக்டர் பதவியை துறந்து வந்துள்ளார் என்றார்.அப்போது, தலித் பெண்மணி ஒருவர், கலெக்டராக இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது போதாது என்று, எம்.எல்.ஏ.,வாகி சுருட்டுவதற்கு வந்து விட்டாரா எனக் கேட்டார். அவரிடம், நீங்கள் நிறைய விஷயம் தெரிந்தவர். கலெக்டர் எப்படி சம்பாதிக்க முடியும், எம்.எல்.ஏ.,க்கள் எப்படி சுருட்ட முடியும் என்பதை தெரிந்து வைத்துள்ளீர். உங்களுக்காக யார் உழைப்பவர்கள் என்பது மறைக்கப்பட்டுள்ளது என்றேன்.தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைப்பவர்கள் குறித்து, ஊடகங்களில் செய்தி போடமாட்டார்கள். அதற்காகவே இன்னும் வேகமாக வேலை செய்ய வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.ஒதுக்கீடு மட்டும் ஒருவரை உயர்த்தாது. ஒதுக்கீட்டுடன் உழைப்பும் இருக்க வேண்டும். உழைப்பதற்கு நிலம் வேண்டும். அரசிடம் நமது உரிமைகளைப் போராடி பெற வேண்டும். ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தவர் அம்பேத்கர். அவர் வழியில் நடப்போம். தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்போம். இவ்வாறு சிவகாமி பேசினார்.
சமூக சமத்துவப்படை சார்பில் பஞ்சமி நில மீட்பு மாநாடு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே சமூக சமத்துவப்படை சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் மே தின விழா பஞ்சமி நில மீட்பு மாநாடாக கொண்டாடப்பட்டது.
சமூக சமத்துவப்படை இவ்வருடம் அம்பேத்கர் பிறந்த நாளை, மே தினத்துடன் இணைத்து, 121 இடங்களில் பஞ்சமி நிலத்தை கைப்பற்ற உறுதியேற்கும் நாளாக கொண்டாடுகிறது. கூட்டம் நடைபெறும் இடங்களில், அப்பகுதி சார்ந்த கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் கூரம் கேட் அருகே நடந்த மாநாட்டிற்கு, சமூக சமத்துவப்படை நிறுவனர் சிவகாமி தலைமை தாங்கினார். விழாவையொட்டி, பெண்கள் பானைகளில் பொங்கலிட்டனர். சிறுவர், சிறுமியர் நடன நிகழ்ச்சி, பேச்சு போட்டி ஆகியவை நடந்தது. மாநாட்டில் மாநில துணைத் தலைவர் மணிவேல், பொதுச் செயலர் கோவிந்தசாமி, மாநிலப் பொருளாளர் மோகன்ராஜ், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலர் கபாலி, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply