அரசு தொழிற்கல்வி கல்லூரி வேண்டும்; அரசு பள்ளிகள் வேண்டாம்.

posted in: கல்வி | 0

தொழிற்கல்வி பயில அரசு கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை தங்களது முதலாவது நோக்கமாகக் கொண்டுள்ள பெற்றோர் பள்ளிப்படிப்புக்கு தங்களது கடைசி சாய்ஸ் ஆகவே அரசு பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த நிலை மாற அரசு பள்ளிகளும் தனியாருக்கு இணையாக செயல்பட மாணவர், பெற்றோர், ஆசிரியர், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

65 பள்ளிகளில் ஒரு பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாவட்டக் கல்வி அதிகாரியும், முழு மாவட்டத்திற்கும் சேர்த்து ஒருமுதன்மை கல்வி அதிகாரியும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 138 தனியார் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளும், 65 அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

பள்ளி இறுதித்தேர்வு முடிவுகளில் கடந்த சில ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்திலும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டாமிடத்திலும் இருந்து வந்தது. இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. அரசு பள்ளியில் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு கல்வி சம்பந்தமாக எந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்தாலும் தற்போது அரசு பள்ளிகளில் தான் முதலில் அறிமுகம் செய்கின்றனர்.

எஸ்.எஸ்.ஏ.,என அழைக்கப்படும் அனைவருக்கும் கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தபின் அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டிடம், கம்ப்யூட்டர், கழிப்பிடவசதி என நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகள் இருந்தாலும் இங்கு மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். படித்த மற்றும் உயர் வருவாய் பிரிவினர்கள் தங்களது பிள்ளைகளை தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

அதற்கு அடுத்த நிலையில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த பள்ளிகள் எதிலும் படிக்க வைக்க இயலாதவர்கள் தங்களது கடைசித் தேர்வாக அரசுப்பள்ளியை கருதுகின்றனர். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மிக அதிக அளவில் உள்ளன. ஆனால் வடமாவட்டங்களில் தனியார் பள்ளிகள் எண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ளன. எனவே அங்கு அரசுப்பள்ளிகளில் தான் பயில வேண்டும் என கட்டாய சூழல் உள்ளது.

எனவேதான் வடமாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் ஒருசிலர் சிறப்பிடம் பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவதும் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாத சூழலுக்கு ஆசிரியர் பற்றாக்குறையும், தலைமையாசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிக வருடம் பணியாற்ற இயலாமல் அடிக்கடி மாறுதல் பெற்றுச் சென்றுவிடுவதும் முக்கிய காரணம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அரசுப் பள்ளியைப் பொறுத்தவரையில் பிளஸ் 2 முதல் குரூப் எனப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல் ஆசிரியர்களும், ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் எல்லா பள்ளிக்கூடத்திலும் உள்ளனர். தமிழ், உயிரியியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. எந்த பாடங்களுக்கு எல்லாம் ஆசிரியர் இல்லையோ அந்தப் பாடத்தில் மாணவர்கள் அதிகம் தோல்வியடைகின்றனர்.

ஏராளமான ஆசிரியர் காலிபணியிடங்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடம் ஆயிரத்துக்கும் மேல் காலியாக உள்ளது. இளநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் வைத்துக்கூட சில பள்ளிகளில் தமிழ்பாடம் கற்றுக் கொடுக்கும் நிலை உள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் கூறும்பொழுது, சென்றவருடம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசியல் தலையீடு காரணமாக சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு கூறப்பட்ட காரணம் அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் பாடப்பிரிவில் ஒரு மாணவன் தோல்வியடைந்தது எனக் கூறப்பட்டது. அவர் நீதிமன்றம் சென்று டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்து தீர்ப்பு பெற்றும் கல்வி அதிகாரிகள் ஆர்டர் வழங்காததால் இன்று அந்த ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சம்பளத்துடன் அதே பள்ளியில் வேலை வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஈகோ பிரச்னையால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பேறுகால மருத்துவ விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளில் அரசு சம்பளம் வழங்குகிறது. ஆனால் அதே சம்பளத்தில் அரசு பள்ளியில் வேறு ஒரு ஆசிரியரை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்த முடியாது.

பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து அந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு கூறுகிறது. பல அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நிதிவசதி இல்லை. அரசு தற்போது பேறுகால விடுப்பு ஆறுமாதமாக உயர்த்தி உத்திரவிட்டுள்ளது. வரவேற்கத்தக்கது. அதே நேரம் அந்த பேறுகால விடுப்பு காலியிடத்திற்கு ஆசிரியர் நியமிக்காவிட்டால் ஒரு ஆண்டு முழுவதும் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது என கூறினார்.

முன்பு போல் பேறுகால விடுப்புக்கு தனியார் பள்ளிகளுக்கு வழங்குவது போல் அரசு பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியருக்கு அரசு சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கூறினார். தற்போது தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் அதிக பள்ளிகள் உள்ளதால் திருச்செந்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கினால் நிர்வாகம் செய்ய இலகுவாக இருக்கும். மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் படி 9ம் வகுப்பு வரை தற்போது மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது. கட்டாயம் பாஸ் மார்க் போட வேண்டும் என கூறும்பொழுது படிக்கும் மாணவர் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பின்மை அதிகரிக்கும். மேலும் கிராமப்புறத்திலிருந்து பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் நலிந்த பெற்றோர்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கும் அரசு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு வரை யாரையும் பெயிலாக்கக் கூடாது எனும் பொழுது தனது குழந்தைகளின் கல்வித்தரத்தை சராசரி பெற்றோர்களால் உணர்ந்து கொள்ள இயலாது. பல பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் தலைமையிடத்தில் இருப்பது இல்லை.

மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து வேலை பார்க்கின்றனர். தினசரி ஐம்பது முதல் 70 கி.மீ.,தூரம் சென்று வருகின்றனர். எட்டு கிலோ மீட்டருக்குள் தலைமையாசிரியர்கள் குடியிருக்க வேண்டும் என்ற விதி தற்போது தாராளமாக மீறப்படுகிறது. இதுபோல தூர இடங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் விரைவில் பணி மாறுதல் பெற்றுச் சென்று விடுவதால் பள்ளிகள் கண்டிப்புடன் ஒரே சீரான நிர்வாகத்தை வழங்க இயலவில்லை.

தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூடத்திற்கு இடையே உள்ள தொடர்புபோல் அரசு பள்ளிகளிலும் மாணவர், பெற்றோர் ஆசிரியர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் ஸ்பெஷல் கிளாஸ் என விடுமுறை நாட்களில் பாடம் நடத்தும் பொழுது மாணவர்களின் வருகை முழுமையாக இருக்கும். இல்லையென்றால் பல இடங்களில் தற்போது செல்வது போல விடுமுறை நாட்களில் கூலி வேலைகளுக்கு செல்வது தொடரத்தான் செய்யும். உயர்கல்வி மற்றும் தொழிற்கல்விகளுக்கு அரசு நிறுவனங்களில் இடம் கிடைப்பதற்குத்தான் அனைத்து தனியார் பள்ளி மாணவர்களும் விரும்புகின்றனர். அதே தரம் ஆரம்ப கல்வியிலும் வழங்கப்பட்டால் நம்பிக்கையுடன் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்ப்பர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *