புதுச்சேரி:புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.
புதுச்சேரியில் ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்த போதிலும், அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று கூட இல்லை. இந்த குறையைப் போக்க, கதிர்காமத்தில், 40 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு, முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக, கடந்தாண்டு, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டது.மருத்துவக் கல்லூரியை, மருத்துவ கவுன்சில் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.
இதையடுத்து, அடிப்படை வசதிகள், மருத்துவக் கருவிகள் போதுமான அளவு இல்லை, பேராசிரியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி தர மருத்துவ கவுன்சில் மறுத்தது.மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் உத்தரவின்படி, மருத்துவக் கல்லூரியை மருத்துவ கவுன்சில் குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர். நீண்ட இழுபறிக்குப் பின், எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது.
நாட்டிலேயே முதல் முறையாக புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், தற்போது இரண்டாமாண்டில் காலடி வைக்க உள்ளனர்.இச்சூழ்நிலையில், கடந்த 11ம் தேதி புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலர், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் மதிப்பீட்டுக் குழு, கடந்த பிப்ரவரி 18, 19 தேதிகளில் ஆய்வு செய்தது.மதிப்பீட்டுக் குழு ஆய்வில் கல்லூரியின் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமானதாக இல்லை. ஆகவே, கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தாலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற குறைபாடுகளாலும், 2011-12 ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடியாக அனுமதி மறுத்துள்ளது புதுச்சேரி மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply