அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஓடாத “டிவி’க்கும் பயணிகளிடம் பணம் பறிப்பு

posted in: மற்றவை | 0

சேலம் : தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், “டிவி’ ஒளிபரப்பு தடைபட்டுள்ள நிலையிலும், பயணிகளிடம் அதற்கான கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும், தமிழக விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, முக்கிய நகரங்களில், 23 கிளை டிப்போக்கள் உள்ளன. அவற்றிலிருந்து, 885 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் “டிவி’ பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பஸ்களில் “டிவிடி’ பிளேயர் வைத்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. “சிடி’க்கள் செலவை கருத்தில் கொண்டு ஒளிபரப்பு உரிமை தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. உரிமையை பெற்ற தனியார் நிறுவனம் “பூம் டிவி’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை சாட்டிலைட் உதவியுடன் ஒளிபரப்பி வந்தது. இந்த ஒளிபரப்புக்காக, அனைத்து பஸ்களிலும் “எல்சிடி’ “டிவி’க்கள் பொறுத்தப்பட்டன. ஒளிபரப்பு உரிமையை பெற்ற நிறுவனம், போதிய விளம்பரம் வரவில்லை என்பதை காரணம் காட்டி, ஒளிபரப்பு உரிமையை புதுப்பிக்கவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களிலும் தற்போது, “டிவி’ ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் புதிதாக வழங்கிய போது, பயணிகளின் வசதிக்காக மொபைல் போனுக்கு சார்ஜர் செய்யும் வசதி, இருக்கைகளுக்கு மேல் எக்ஸ்ட்ரா பேன், இருக்கைகளின் மேல் புதிய துணிகள், தண்ணீர் பாட்டில்களை வைத்துக் கொள்ளும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அதை பராமரிப்பு செய்வதற்கு தேவையான மெக்கானிக்குகளையோ, பராமரிப்புக்கு செலவு தொகைகளை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.

அந்த பஸ்கள் அனைத்தும் தற்போது, படுமோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய பஸ்கள் இயக்கப்பட்ட போது, பஸ் கட்டணத்துடன் “டிவி’ ஒளிபரப்புக்கு என, ஐந்து ரூபாய் சேர்த்து வசூல் செய்தனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்திலும், “டிவி’ ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பழைய கட்டணமே வசூல் செய்யப்படுகிறது.

இது குறித்து பயணிகள் சிலர், கான்ட்ராக்டர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள், கிளை மேலாளர்களிடம் இந்த பிரச்னையை கொண்டு சென்ற போது, “டிவி’ ஒளிபரப்புக்காக கூடுதலாக வசூல் செய்யும் ஐந்து ரூபாயை குறைத்தால், நிர்வாகத்துக்குத் தான் இழப்பு. எனவே, பயணிகளிடம் எவ்வித தகவல்களையும் தெரிவிக்காமல் அதே கட்டணத்தை தொடருங்கள்’ என, தெரிவித்து விட்டனர். இதனால், அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களிலும் ஐந்து ரூபாய் சேர்த்து வசூல் செய்யப்படுகிறது. இது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கிளை மேலாளர் ஒருவர் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. தற்போதுள்ள கட்டணத்தில் குறைப்பு செய்தால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். புதிய அரசு பதவி ஏற்ற உடன் தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கிறோம். அப்போது இது குறித்து தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *