பொள்ளாச்சி: தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், “கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட, அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா’ என்ற சந்தேகம், பயனாளிகளிடையே வலுத்துள்ளது.
கிராமங்களில், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றும் நோக்கில், 2010ம் ஆண்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் (கே.வி.வி.டி.,) அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், மொத்தம், 21 லட்சம் குடிசை வீடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்டுதோறும், மூன்று லட்சம் வீடுகள் வீதம், 2016ம் ஆண்டுக்குள், 21 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல்கட்டமாக, மூன்று லட்சம் வீடுகள் கட்டும் பணி துவங்கியது. இத்திட்ட பயனாளிகளுக்கு, 75 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாகவும், 2,200 ரூபாய், தனி நபர் கழிப்பிடம் கட்டவும் வழங்கப்பட்டது. இதுதவிர, வங்கி மூலம், 20 ஆயிரம் ரூபாய் கடனுதவியும் வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில், மூன்று லட்சம் வீடு கட்டும் பணி துவங்கியதால், செங்கல், சிமென்ட், மணல் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும், பல மடங்காக உயர்ந்ததுடன், பொருட்களும் தட்டுப்பாடானது. இதனால் தவிப்புக்குள்ளான பயனாளிகள், வீடு கட்டும் பணியை பாதியில் நிறுத்தினர். அரசும், மாவட்ட, ஒன்றிய அதிகாரிகளும் வீடு கட்ட நெருக்கடி செய்ததால், கடன் பெற்று வீடு கட்டும் பணியை மேற்கொண்டனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை ஆயிரம் வீடுகள் வரை மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பல வீடுகள், மணல், செங்கல் சரிவர கிடைக்காததால் அரைகுறை நிலையில் உள்ளன. இனி வரும் ஆண்டுகளில், வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, கடந்தாண்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், வீடு கட்டும் திட்டம் தொடருமா என்ற சந்தேகம் பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. “திட்டம் பெயர் மாற்றப்பட்டு பழைய நடைமுறை பின்பற்றி திட்டப் பணிகள் துவங்கப்படும்’ என்ற கருத்தும் வலுத்துள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கனவே மேற்கொள்ளும் திட்டங்களை தொடர்வது குறித்து இதுவரை அறிவிப்பு எதையும் புதிய அரசு வெளியிடவில்லை. கே.வி.வி.டி., திட்டப் பணிகளை ஆய்வு செய்வது குறித்தும், பணிகளை துரிதப்படுத்தவும் எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால், பல பயனாளிகள் கட்டுமானப் பணியை கைவிட்டுள்ளனர். பல இடங்களில், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பயனாளிகள் மட்டும் சொந்த பொறுப்பில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பயனாளிகளின் நிலை குறித்து புதிய அரசிடம் எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.
Leave a Reply