ஆந்திர இடைத்தேர்தலில் மும்முனை போட்டி :கடப்பாவை தக்க வைக்க ஜெகன்மோகன் தீவிரம்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: ஆந்திராவில், கடப்பா லோக்சபா மற்றும் புலிவெந்துலா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே, மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளுமே, தங்களின் செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதற்கான களமாக, இந்த தேர்தலை கருதுவதால், இதன் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆந்திராவில், கடப்பா லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்த, முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். புலிவெந்துலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த, ஜெகன்மோகனின் தாயார் விஜயலட்சுமியும், தன் பதவியை ராஜினாமா செய்தார்.இந்த இரு தொகுதிகளுக்கும், நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில், ஆளும் கட்சியான காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், ஜெகன்மோகனின் புதிய கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே, மும்முனை போட்டி நிலவுகிறது.கடப்பா லோக்சபா தொகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பாக, ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரவீந்திர ரெட்டி களம் இறக்கப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யான மைசூர் ரெட்டி போட்டியிடுகிறார்.புலிவெந்துலா தொகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் விஜயலட்சுமி மீண்டும் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் சார்பாக, முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்த ரெட்டியும், தெலுங்கு தேசம் வேட்பாளராக ரவீந்திரநாத் ரெட்டியும் களம் இறங்கியுள்ளனர்.மும்முனை போட்டி என்பதால், கடந்த ஒரு மாதமாக பிரசாரம் களைகட்டியது. பிரசாரத்தின் போது, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “இந்த தேர்தல் நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடக்கும் போட்டி’ என்றார்.

ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், “ராஜசேகர ரெட்டியின் விசுவாசத்துக்கும், சோனியாவின் துரோகத்துக்கும் இடையே நடக்கும் போட்டி’ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகம் சிறப்பாக நடந்து வருகிறது. எனவே, மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும்’ என கூறப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நடந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சுதந்திரமாகவும், பயமின்றியும் ஓட்டளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

இரண்டு கோடி ரூபாய் பறிமுதல்: ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி பன்வாரிலால் கூறியதாவது:தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன. தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக, 11 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பதட்டமான ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு, 55 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பன்வாரிலால் கூறினார்.

ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர், தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாக இதை கருதுவதால், இதன் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சிரஞ்சீவி எம்.எல்.ஏ., பல்டி: நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியின் (சிரஞ்சீவி, தற்போது காங்கிரசுடன் தனது கட்சியை இணைத்து விட்டார்.) பங்கனபள்ளி தொகுதி எம்.எல்.ஏ., ராமி ரெட்டி.ஜெகன்மோகன் ரெட்டி, புதிய கட்சியை துவங்கியதும், அவருக்கு ஆதரவாக ராமி ரெட்டி செயல்பட்டார். சிரஞ்சீவி எச்சரித்தும், அதை இவர் பொருட்படுத்தவில்லை.”கட்சி விரோதப் போக்குடன் செயல்படும் ராமி ரெட்டியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என, சிரஞ்சீவி கட்சி சார்பில், சட்டசபை சபாநாயகரிடம், சமீபத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து வெளியேறிவிட்டதாக, ராமி ரெட்டி அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஜெகன்மோகன் ரெட்டி, சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறார். அவருடன் இருப்பவர்கள் அனைவரும் ஒருவித நெருக்கடியில் தான் இருக்கின்றனர். பிரஜா ராஜ்யம் கட்சியில் இருந்து விலகியதாக, நான் எப்போதுமே அறிவித்தது இல்லை. சிரஞ்சீவியை நான் மதிக்கிறேன்’ என்றார். தன் கூடாரத்தில் இருந்து ராமி ரெட்டி வெளியேறியதால், ஜெகன்மோகன் ரெட்டி கலக்கம் அடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *