இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி * சுருண்டது இலங்கை

கார்டிப்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அசத்தல் பெற்றது.


இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கார்டிப் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 400 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு டிராட் (203), குக் (133) கைகொடுக்க, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது. பெல் (98), மார்கன் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
பெல் சதம்:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் பெல் சதம் அடித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 496 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. பெல் (103), மார்கன் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
சுருண்டது இலங்கை:
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சில் திணறியது. இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 82 ரன்களுக்கு சுருண்டதன் மூலம், இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இலங்கை சார்பில் பெரேரா அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் சுவான், டிரம்லட் தலா 4, பிராட் 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரட்டை சதம் கடந்த டிராட் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இரண்டாவது டெஸ்ட் அடுத்த மாதம் 3ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *