புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா, தொலை தொடர்பு அதிகாரிகள், ஆதாயம் பெற்ற பெரும் நிறுவன இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள் என மொத்தம் 11 பேர் ஜாமின் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கனிமொழியை ஜாமினில் விடுவதா அல்லது நீதிமன்ற காவிலில் வைப்பதா என சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி ஓ.பி., சைனி இன்று மதியம் 1 மணிக்கு மேல் தீர்ப்பளிக்கிறார்.
கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இவர் கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இன்றைய விசாரணைக்கு கனிமொழி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். இன்று ஜாமின் கிடைக்குமா அல்லது நீதிமன்ற காவலில் வைக்கப்படுவாரா என்பது மதியம் 1 மணிக்கு மேல் தெரிந்து விடும்.
கனிமொழிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்றும் பெண் என்பதால் இவரை ஜாமினில் விட வேண்டும் என்றும் ராம்ஜெத்மலானி வாதாடினார். சி.பி.ஐ.,வக்கீல் லலித் தனது வாதத்தில் ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்த காரணத்தினால் ரூ. 214 கோடி பரிமாற்றம் நடந்தது என்றும் இவரை ஜாமினில் விடக்கூடாது என்றும் வாதிட்டனர் .
இது குறித்த தீர்ப்பை நீதிபதி இன்று அளிக்கவிருக்கிறார். ஏற்கனவே சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது தி.மு.க.,. இந்நேரத்தில் கனிமொழி விவகாரத்தில் வரும் உத்தரவை பொறுத்து சற்று நிம்மதி கிடைக்குமா என்று அறிவாலய வட்டாரம் எதிர்நோக்கி இருக்கிறது.
சிறையில் இருப்பது யார் ? யார் ? : மாஜி அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா, டி. பி.ரியாலிட்டியை சேர்ந்த ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோர் ஜாமின் கிடைக்காமல் ஜெயிலில் உள்ளனர்.
Leave a Reply