அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.) எழுத விண்ணப்பித்த அனைவரையுமே மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி மாணவி ஒருவரின் தாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று (மே 1) நடைபெற்ற ஏ.ஐ.இ.இ.இ. தேர்வுக்கான கேள்வித்தாள், உத்திரப்பிரதேச மாநிலத்தில் முறைகேடாக வெளியானதைத் தொடர்ந்து தேர்வு துவங்குவதில் சிக்கல் எழுந்தது.
சில மையங்களில் தேர்வு நேரம் மாற்றி அமைக்கப்பட்டு 3 மணி நேர கால தாமதத்துடன் துவங்கியது. சில மையங்களில் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தேர்வு நடைபெறாத மையங்களில் மே 11ஆம் தேதி மறுதேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த 12 லட்சம் மாணவர்களில் 40,000 பேர் மே 11ம் தேதி மறுதேர்வு எழுதுகிறார்கள்.
இந்த நிலையில், நுழைவுத் தேர்வு எழுதிய மாணவி மனிஷா தியாகியின் தாய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
அதில், தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், நல்ல முறையில் தேர்வு எழுதவில்லை. காலையில் தேர்வு எழுத வந்த மாணவர்கள், உரிய நேரத்தில் தேர்வு துவங்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மேலும், பல்வேறு புரளிகளால் கலக்கமுற்றனர். பல மணி நேரம், கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க மையங்களில் நின்றிருந்ததால் உடல் நிலையும் பாதித்தது. இந்த நிலையில்தான் அன்றைய தினம் பல மாணவர்கள் நுழைவுத் தேர்வினை எழுதினர். இதனால் அவர்களால் சரியாக தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, மே 11ஆம் தேதி நடக்கும் மறு தேர்விற்கு, அனைத்து மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது
Leave a Reply