ஐ.நா.வில் இடம்பெறுவதற்கான தகுதிகள் இந்தியாவிற்கு உள்ளதா என்பது சந்தேகமே: சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

posted in: உலகம் | 0

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா உட்பட 14 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

“கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதி இந்தியாவுக்கு இல்லை” என ஐ.நா செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று விமர்சித்துள்ளது.

கடந்த 2006ல் உருவாக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் 47 உறுப்பு நாடுகளைக் கொண்டது. இதில் 13 ஆப்ரிக்காவுக்கும், 13 ஆசியாவுக்கும், ஆறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், எட்டு லத்தீன் அமெரிக்காவுக்கும், ஏழு மேற்கு ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசியாவுக்கான நான்கு இடங்கள் உள்ளிட்ட 14 இடங்களுக்கான நாடுகள் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆசியா பிரிவில் இந்தியா 181 ஓட்டுகளை பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் இக்கவுன்சிலில் ஜூன் 19ம் திகதி முதல் தங்கள் பணிகளைத் துவக்கும்.

இந்தியாவுக்கு தகுதி உண்டா? சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் இயங்கி வரும் ஐ.நா.வின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பான ஐ.நா கண்காணிப்பு அமைப்பானது மனித உரிமைகள் கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதிகள் இந்தியாவிடம் இருக்கின்றனவா என்பது சந்தேகம் தான் என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் இந்தியா தவறான செய்தியை அந்நாட்டுக்கு அளித்துள்ளது. அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன.

அதை முன்னிறுத்தாமல் அந்நாட்டு அரசின் சமீபத்திய அரசியல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ளது. அதேபோல் காங்கோ மற்றும் குவைத்துக்கும் கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதர் மஞ்சீவ் சிங் புரி இதுகுறித்து அளித்த பதிலில்,”இதை ஒப்புக் கொள்ள முடியாது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு பன்முகக் கலாசாரமும், பல்வேறு சமுதாயங்களும் உள்ளன. இந்தத் தெரிவு உலக நாடுகளின் தெரிவு” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *