சென்னை : சென்னையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பகலில் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும்படி, ஐ.பி.எல்., தலைவர், தமிழக அரசு, மின்வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த வாசன் என்ற சக்திவாசன் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் தனபால், ஆறுமுகசாமி அடங்கிய, “டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஐ.பி.எல்., தலைவர், பி.சி.சி.ஐ., தமிழக அரசு, மின்வாரியத்திற்கு, “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
ஐகோர்ட்டில் சக்திவாசன் தாக்கல் செய்த மனு: கிரிக்கெட் போட்டியை பொழுதுபோக்குக்காக நடத்துகின்றனர். அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. வசதிபடைத்தவர்கள் தான் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். சென்னையில் நடத்தும் ஐ.பி.எல்., போட்டிக்காக, ஐ.பி.எல்., – பி.சி.சி.ஐ., – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் பொழுதுபோக்கு வரி வசூலிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இதற்கு நடவடிக்கை எடுத்தால், வருவாய் பெருகும். அதன்மூலம், மக்கள் நல திட்டங்களுக்கு செலவழிக்க முடியும். ஐ.பி.எல்., போட்டிகள் பெரும்பாலும், பகல், இரவு நேரங்களில் நடக்கிறது. இதற்கு மின்சாரம் ஏராளமாக செலவாகும். தற்போது மின் வெட்டு அமலில் உள்ளது. போதிய மின்சாரம் இல்லாததால், மின்வெட்டு ஏற்படுகிறது. ஒரு பக்கம் மின்வெட்டால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மறுபக்கம், கிரிக்கெட் போட்டிக்காக கணிசமான மின்சாரம் செலவிடப்படுகிறது. எனவே, மின்சார தட்டுப்பாட்டை நீக்கும் வகையில், ஐ.பி.எல்., போட்டிகளை பகலில் நடத்த உத்தரவிட வேண்டும். இந்தப் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரி விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply