வாஷிங்டன் : உலக வரலாற்றிலேயே, அதிகபட்சமாக, ஒரு பயங்கரவாதியின் தலைக்கு, 230 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது, ஒசாமா பின் லாடனுக்கு தான்.
அமெரிக்க வரலாற்றில், அதிக விலை கொடுத்து அரங்கேற்றப்பட்ட கொலையாக, ஒசாமாவின் கொலை விமர்சிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில், 1979ல் இருந்து, 1989ம் ஆண்டு வரை, கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தது. அப்போது, ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட உருவாக்கப்பட்ட ஜிகாதிகளுக்கு, பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., மூலம், அமெரிக்கா நிதி உதவி செய்து வந்தது. இறுதியில், ஆப்கன் மண்ணில் இருந்து, 1989ல், ரஷ்ய படைகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து, ஜிகாதிகள் அமைப்பான மக் என்றழைக்கப்படும், மக்தப் அல் கிதாமத் பயங்கரவாத அமைப்பில் இருந்து, 1989ல், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு உருவானது. இதற்கு தலைவரானார் ஒசாமா பின்லாடன். சூடான், ஈராக் போன்ற நாடுகளில் தனது வலையை விரிவுபடுத்த ஒசாமா சென்றார். பின்னர், அழையா விருந்தாளியாக, 1996ல், ஆப்கனுக்கு வந்தார். அப்போது, ஆப்கனின் பெரும்பாலான பகுதிகளை தன் கைக்குள் வைத்திருந்த தலிபான் பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்து, தலிபான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தார். இப்படி, அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட ஒசாமாவை, விரட்டி அடிக்க, பின்னர் அமெரிக்கா பெரிய அளவில் நிதியை கரைக்க வேண்டியதாகிவிட்டது. அமெரிக்காவின், நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, 2001, செப்டம்பர் 11ம் தேதி, வெடிகுண்டுகள் தாங்கிய விமானங்களை மோதி அழிக்க காரணமாக இருந்தவர் ஒசாமா. இச்சம்பவத்திற்கு பின், இவரது தலைக்கு, அமெரிக்க அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொகை, 230 கோடி ரூபாய். அல்-குவைதாவின் வலை ஆப்கன், ஈராக், ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ் என்று வளர்ந்தாலும், அமெரிக்கா தேடும் முக்கிய நபராக இருந்தவர் ஒசாமா. இதுவரை, ஒசாமாவை தேடியும், போர்களுக்காகவும், அமெரிக்கா செலவழித்த நிதி, 58 லட்சத்து, 88 ஆயிரம் கோடி ரூபாய் என, அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வு அமைப்பு, சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்த நிதியில், 63 சதவீதம், அதாவது, 37 லட்சத்து, 7,000 கோடி ரூபாய் ஈராக்கிலும், ஆப்கனில், 35 சதவீதமான, 20 லட்சத்து, 42 ஆயிரத்து, 400 கோடி ரூபாயும் அமெரிக்க அரசால் செலவிடப்பட்டுள்ளது. உலகளவில், பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க ராணுவ மையங்களை திறக்க, ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள, 27 ஆயிரத்து, 600 கோடி ரூபாய்க்கு ஆய்வு நடத்தியவர்களால் கணக்கு காட்ட முடியவில்லை. அமெரிக்கா செலவிடும் நிதி, 2021ம் ஆண்டில், 82 லட்சத்து, 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒசாமாவை கொன்று விட்டதால் மட்டும், பாதுகாப்பிற்காக செலவழிப்பதை அமெரிக்கா நிறுத்தி கொள்ளும் அல்லது குறைத்து கொள்ளும் என, கூறி விட முடியாது. பயங்கரவாதி ஒசாமாவை பிடிக்க, அமெரிக்கா இழந்த வீரர்கள், 6,000 பேர். மேலும், 55 ஆயிரம் வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஈராக்கில், அமெரிக்கா நேரடியாக ஈடுபட்ட போரில், இறந்த அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கை, 12 லட்சம் என, கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்கனில் நடந்த போரில், 20 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, 50 ஆயிரம் பேர் காயமடைந்தனர். கடந்த பத்தாண்டுகளில், சோமாலியா மற்றும் அதன் பக்கத்து நாடுகளில், 6,500 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு அப்பாவிகள் பலியாகி, கோடிகள் வாரி இறைத்த பின்னர், ஒசாமா கொல்லப்பட்டுள்ளார். ஒசாமாவுக்கு பின், ஆப்கனில் தங்கியிருக்கும், ஒரு லட்சம் அமெரிக்க வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Leave a Reply