இஸ்லாமாபாத் : அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த வீட்டை, விரைவில் இடிக்கப் போவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், “டெய்லி நியூஸ்’ என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:பின்லாடன் தங்கியிருந்த பண்ணை வீட்டுக்கு, தற்போது ஏராளமானோர் வரத் துவங்கி விட்டனர். இந்த வீட்டிற்கு வரும் அனைத்து வழிகளும், ராணுவத்தால் “சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டை, விரைவில் இடித்து தரைமட்டமாக்க, திட்டமிடப்பட்டுள்ளது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கு முன்பாக, இந்த வீட்டிற்கு, பத்திரிகையாளர்களை அனுமதிப்பதா, இல்லையா என்பது பற்றி, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அபோதாபாத் நகர போலீஸ் அதிகாரி நசீர்கான் கூறுகையில்,”தாக்குதல் நடந்த வீட்டில், எந்த சடலத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. இந்த கட்டடம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிப் பகுதியில் தான், நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அந்த வீட்டுக்குள் செல்ல, எனக்கு கூட அனுமதி கிடைக்கவில்லை’என்றார்.
Leave a Reply