கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-நாளை ஆஜராக உத்தரவு

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது.

இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிப்பர் என்று தெரிகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ அமைப்பும் விசாரித்து வருவதும், சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை மறுதினம், 6ம் தேதி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி இல்லத்தில் ஆலோசனை:

இந் நிலையில் கனிமொழியின் இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கப் பிரிவுக்கு ராடியா லஞ்சம் தர முயன்ற வழக்கு:

இந் நிலையில் 2ஜி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உபேந்திர ராய் என்ற பத்திரிகையாளர் மூலமாக நீரா ராடியா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ துவக்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *