“கனிமொழிக்கு, பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற வகையில், பார்லிமென்ட் பணிகளையும் அவர் ஆற்ற வேண்டியுள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்,” என, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டிக்கு சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் வழங்க மறுத்ததை எதிர்த்தும், அவர்களை ஜாமினில் விடுவிக்கக் கோரியும், டில்லி ஐகோர்ட்டில், பிரபல சட்ட நிபுணர்கள், துள்சி மற்றும் ஹரீஸ் சால்வே ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கனிமொழி சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. புனைந்துரைக்கப்பட்டவை. கனிமொழி சார்பிலான நியாயங்களை சரியாக அலசிப் பார்க்காமல், அவரது ஜாமின் மனுவை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துள்ளது. கனிமொழிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது தவறான செயல். அவர் தரப்பில் உள்ள நியாயங்களை சி.பி.ஐ., கோர்ட் கவனிக்கத் தவறி விட்டது.கனிமொழி மீது, துணைக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை, புனையப்பட்டவை. அவர், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர். முதுநிலை பட்டதாரி. ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற தகுதி நிலைகளை எல்லாம், சி.பி.ஐ., கோர்ட் கவனிக்கத் தவறி விட்டது.பாரபட்சமான வகையில் ஊடகங்கள் வெளியிட்ட புனைவுச் செய்திகளின் அடிப்படையில் தான், தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று கனிமொழி சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களையும் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை.ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியதில், தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதை கனிமொழி விளக்கியிருக்கிறார்.
“கலைஞர், “டிவி’யில், தான், 20 சதவீத பங்குகள் வைத்துள்ள பங்குதாரர் மட்டுமே. அந்நிறுவனத்தின் செயல்பாட்டில் எந்த வகையிலும் பங்கெடுக்கவில்லை’ என்பதையும் கனிமொழி கூறியுள்ளார்.மேலும், சினியுக் நிறுவனத்திடம் இருந்து, கலைஞர், “டிவி’ பெற்ற, 200 கோடி ரூபாய் கடன் தொகைக்கும், இந்தத் தொகையை வரிப் பிடித்தம் போக வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதற்கும் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த பரிவர்த்தனைகள், இரு நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளன. இதில், எவ்வித ஒளிவு மறைவும் இல்லை. “2ஜி’ விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, கனிமொழி கைது செய்யப்படவில்லை. அவர், சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோதும், சி.பி.ஐ.,யின் காவலில் எடுக்கப்படவில்லை. அதனால், கனிமொழிக்கு ஜாமின் மறுத்தது சரியல்ல.கோர்ட் சம்மனை ஏற்று வழக்கு விசாரணைக்கு கனிமொழி ஆஜராகியுள்ளார்.
கோர்ட்டில் அவரது கண்ணியமான நடவடிக்கையை நீதிபதியே பாராட்டியுள்ளார். கனிமொழிக்கு, பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். மேலும், ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற வகையில் பார்லிமென்ட் பணிகளையும் அவர் ஆற்ற வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்.கலைஞர், “டிவி’க்கு வழங்கப்பட்ட கடன் தொகை, லஞ்சப் பணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கடன்தொகையைப் பெற்றது மற்றும் திருப்பிச் செலுத்தியதற்கு முறையான ஆவணங்கள், ஏற்கனவே, தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, சாட்சியை கலைத்து விடலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கனிமொழிக்கு சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் மறுத்தது சட்டப்படி தவறான செயல்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாமின் மனு இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
Leave a Reply