புதுடில்லி : “நான் எந்த சூழ்நிலையிலும், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர மாட்டேன்’ என, ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
ஆந்திராவின், மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரசிலிருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
முன்னதாக, கடப்பா தொகுதி எம்.பி., பதவியிலிருந்து விலகினார். ஒய்.எஸ்.ஆர்., மறைவுக்கு பின், அவரது தொகுதியான புலிவெந்துலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்., மனைவி விஜயலட்சுமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகனுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய விஜயலட்சுமியும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நாளை மறுநாள் நடக்கிறது.
இதற்காக, தீவிர பிரசாரத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என் முக்கிய கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு பதவி, அந்தஸ்திற்காக காங்கிரசில் இருக்க விரும்பவில்லை. தற்போது நடக்கும் போட்டி, நம்பகத்தன்மைக்கும், சந்தர்ப்பவாதத்திற்கும் இடையேயானது. இன்னும் சொல்லப்போனால், ஒய்.எஸ்.ஆர்., மாவட்டத்திற்கும்(கடப்பா) டில்லிக்கும் இடையேயானது.
மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி, தன் அமைச்சர்களையும் கடப்பாவில் இறக்கிவிட்டுள்ளார். என் தந்தையின் செல்வாக்கை தக்க வைக்க, ஒய்.எஸ்.ஆர்., களம் இறங்கியுள்ளது. எனக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் இடம் தருவதாக சோனியா சொன்னாலும், காங்கிரசில் மீண்டும் சேர மாட்டேன். காங்கிரசிலிருந்து நானாக விலகும்படி பலவித நெருக்குதல் கொடுக்கப்பட்டன. என் தந்தையின் மறைவுக்கு பிறகு, அவரது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு யாத்திரை மேற்கொண்டதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை.
என் தந்தையின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பு தேவை. அதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன். அதற்கு இந்த இடைத்தேர்தல் மூலம், ஆந்திராவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறேன். ஆந்திராவின் சுயமரியாதைக்கும், டில்லியின் அநீதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது. புலிவெந்துலா தொகுதியில், என் தாயை எதிர்த்து, என் தந்தையின் சகோதரரை நிறுத்தியுள்ளனர். எங்கள் குடும்பத்தில் பிரிவை ஏற்படுத்த, டில்லி செய்த சதி என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
Leave a Reply