காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் வாங்கவில்லை: மின் வாரிய தலைவர்

posted in: மற்றவை | 0

கோவை:””காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் தான், அதிகளவு மின்சாரத்தை வாங்க முடியவில்லை,” என, தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சி.பி.சிங் கூறியுள்ளார்.

கோவையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது: தமிழகத்தின் மின் தேவை, 12 ஆயிரம் மெகா வாட்; நமது உற்பத்தித் திறன், 10 ஆயிரத்து, 124 மெகா வாட் மட்டுமே. அதிலும், தற்போது, 7,000 மெகா வாட் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, 2,200 மெகா வாட் திறன் உள்ளது. பெரும்பாலான அணைகளின் நீர் மட்டம் குறைவாக இருப்பதால், மின் உற்பத்தி குறைந்துள்ளது. பற்றாக்குறையாகவுள்ள மின்சாரத்தில், 2,000 மெகா வாட் மின்சாரம், வெளியில் வாங்கப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருந்தும், மின் வாரியம் அதை வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. தமிழகத்தில், மே 15 அல்லது மே 31லிருந்து தான், பருவக் காற்று துவங்கும்.

அதிலிருந்து, செப்டம்பர் அல்லது அக்டோபர் வரையிலும், காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.இதைக் கணக்கிட்டே, மின் கொள்முதல் அட்டவணை தயார் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டில் சற்று முன்பாகவே காற்று துவங்கி விட்டது; இருப்பினும், நிலையான மின் உற்பத்தி இல்லை. ஒரு நாளில், அதிகபட்சமாக, 2 மணி நேரம் மட்டுமே, 500 மெகா வாட் அளவுக்கு, மின் உற்பத்தி நடக்கிறது. பல நேரங்களில், ஜீரோ மெகா வாட் ஆகக் குறைந்து விடுகிறது. தற்போது, தினமும், 200 மெகா வாட் அளவுக்கு காற்றாலை மின்சாரம் வாங்கப்படுகிறது.

காற்றாலை மின்சாரம், நிலையற்ற தன்மையில் இருப்பதால், அதை நம்பி, மின் வினியோகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. காற்றாலை மின் உற்பத்தி குறித்து, அட்டவணையை (ஷெட்யூல்) வழங்க காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் தயாராக இல்லை. காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதி இல்லை என்பதையும் ஏற்க முடியாது.காற்றாலை மின்சாரத்தை வாங்கி, பகிர்வுற்குரிய மின் வழித்தடங்களை (காரிடார்) உருவாக்க, 4,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆரல்வாய்மொழி, கயத்தாறு, தேனி, உடுமலை ஆகிய, நான்கு இடங்களில், 400 மெகா வாட் சேமிப்புத் திறனுள்ள, ஆறு துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, 1,200 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகக் கூறப்படுவதும் தவறானது.கடந்த மே – செப்டம்பர் வரையிலான காலத்தில் பெறப்பட்ட மின்சாரத்தில், 500 கோடி ரூபாய் மட்டுமே தர வேண்டியுள்ளது. அதுவும், விரைவாக வழங்கப்படும். மின் தடையை சமமாகப் பங்கிட வேண்டுமென, பொது நல மனு தாக்கல் செய்துள்ளது பற்றி, நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை. தலைநகரங்களுக்கு மின்தடையிலிருந்து விலக்கு என்பது, மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் நடைமுறையில் உள்ளது.

மின் தடை அதிகரித்திருப்பதற்குக் காரணம், குறுகிய காலத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி தான். புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது, எளிதில் நடக்கும் விஷயமில்லை. இடம் தேர்வு செய்வது, மத்திய வனத் துறையிடம் சான்று பெறுவது என, பல விஷயங்களைத் தாண்டி, மின் உற்பத்தி துவங்க, குறைந்தபட்சம், ஆறு ஆண்டுகளாகி விடும்.முன் எப்போதும் இல்லாத வகையில், தென்னக மின் தொகுப்பிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை இருப்பதே, தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலைக்குக் காரணம். ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு, புதிய வரி போடப்படவில்லை. கடந்த, 25 ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது. எங்கள் தரப்பை விளக்கி விட்டோம்; போராட்டம் நடத்துவது, அவரவர் சுதந்திரம். அதில், நாங்கள் தலையிடப்போவதில்லை.இவ்வாறு சி.பி.சிங் தெரிவித்தார்.

டென்ஷன் ஆன கலெக்டர்! தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கே மின்சாரம் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், விளம்பரப் பலகைகளுக்கு தடையற்ற மின்சாரம் தருவது பற்றி சி.பி.சிங்கிடம் கேட்டபோது, தானாகவே குறுக்கிட்ட கலெக்டர் உமாநாத், “ஒரு விளம்பரப் பலகையில், 40 வாட்ஸ் பல்பு போடப்படுகிறது; அதனால், பெரிதாக மின்சாரம் செலவாகிவிடாது’ என, படு ஆவேசமாகப் பதிலளித்ததுடன், நீண்ட விளக்கமும் அளித்தார்.”விளம்பரப் பலகை பற்றி கேள்வி கேட்கும்போதெல்லாம் நீங்க ஏன் சார் இப்படி டென்ஷன் ஆகுறீங்க?’ என நிருபர்களும் கோபப்பட்டு, விளம்பரப் பலகைகள், பஸ் ஸ்டாப்களில் வீணாகும் மின்சாரம் பற்றி விளக்கமாகக் கூற, கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் வாதிட்டார் கலெக்டர். அந்த கேள்விக்கு, சி.பி.சிங்கை பதில் சொல்லவே அவர் அனுமதிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *