மும்பை: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் சச்சின் தலைமையிலான மும்பை அணி, பைனலுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கோல்கட்டா அணி தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த “நாக்-அவுட்’ போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் சச்சின் “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
முனாப் அசத்தல்:
கோல்கட்டா அணி எடுத்த எடுப்பிலேயே திணறியது. முனாப் படேல் வேகத்தில் சச்சினின் கலக்கல் “கேட்ச்சில்’ காலிஸ்(7) காலியானார். ஹர்பஜன் சுழலில் கேப்டன் காம்பிர்(4) போல்டானார். முனாப் படேலின் அடுத்த ஓவரில் கோஸ்வாமி(0) வீழ்ந்தார். குல்கர்னி பந்தில் மனோஜ் திவாரி(4)அவுட்டானார். இப்படி “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்ட, கோல்கட்டா அணி 5.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு வெறும் 20 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் யூசுப் பதான், டசாட்டே இணைந்து அணியை ஓரளவுக்கு மீட்டனர். போலார்டு வீசிய போட்டியின் 11வது ஓவரில் டசாட்டே ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். பதானும் ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 15 ரன்கள் கிடைத்தன. இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த முனாப் படேல் “ஆபத்தான’ யூசுப் பதானை(26) அவுட்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
டசாட்டே அரைசதம்:
அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் அதிரடியாக ஆடினார். குல்கர்னி ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். இவர், மலிங்கா வேகத்தில் 26 ரன்களுக்கு போல்டானார். தனிநபராக போராடிய டசாட்டே, அரைசதம் கடந்து அசத்தினார். போலார்டு வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்த டசாட்டே, அணிக்கு கவுரவமான ஸ்கோரை பெற்று தந்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. டசாட்டே 70(6 பவுண்டரி, 3 சிக்சர்), பிரட் லீ 2 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
மும்பை அணி தரப்பில் முனாப் படேல் அதிபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
அதிரடி துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சச்சின், பிலிசார்டு இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். பிரட் லீ, அப்துல்லா ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசினார் பிலிசார்டு. பின் யூசுப் பதான் ஓவரில் சச்சின் வரிசையாக நான்கு பவுண்டரிகள் அடிக்க, உள்ளூர் மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். தனது அதிரடியை தொடர்ந்த பிலிசார்டு, பிரட் லீ பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். அதற்கு அடுத்த பந்தில் இவர் 51 ரன்களுக்கு அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு பிலிசார்டு-சச்சின் 82 ரன்கள் சேர்த்தனர்.
காலிஸ் மிரட்டல்:
அடுத்து வந்த ரோகித் சர்மா(0) வீணாக ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் காலிஸ் வேகத்தில் சச்சின்(36) அவுட்டாக, “டென்ஷன்’ ஏற்பட்டது. பின் காலிஸ் வீசிய பந்து அம்பதி ராயுடுவின்(12) பேட்டில் படவேயில்லை. ஆனால், அம்பயர் அசாத் ராப் தவறாக “அவுட்’ கொடுத்தார். சாகிப் பந்தில் போலார்டு(3) துரதிருஷ்டவசாக எல்.பி.டபிள்யு., ஆனார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் பொறுப்பாக ஆடினார் பிராங்க்ளின்.
ஹர்பஜன் “சிக்சர்’:
கடைசி பந்தில் மும்பை அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. சாகிப் அல் ஹசன் பந்துவீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் பிராங்க்ளின். அடுத்த பந்தில் ஹர்பஜன் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து, அணிக்கு “திரில்’ வெற்றி தேடி தந்தார். மும்பை அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டதோடு, சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கும் தகுதி பெற்றது. பிராங்க்ளின்(29), ஹர்பஜன்(11) அவுட்டாகாமல் இருந்தனர். நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
ஆட்ட நாயகன் விருதை முனாப் படேல் வென்றார்.
இன்னொரு சவால்
மும்பை அணி பைனலுக்கு முன்னேற இன்னொரு சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. நாளை நடக்கும் “நாக்-அவுட்’ போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் சென்னை அணியுடன் மோதும்.
ஸ்கோர் போர்டு
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
காம்பிர்(ப)ஹர்பஜன் 4(8)
காலிஸ்(கே)சச்சின்(ப)முனாப் 7(7)
கோஸ்வாமி(கே)ராயுடு(ப)முனாப் 0(3)
திவாரி எல்.பி.டபிள்யு.,(ப)குல்கர்னி 4(7)
யூசுப்(கே)போலார்டு(ப)முனாப் 26(24)
டசாட்டே-அவுட் இல்லை- 70(49)
சாகிப்(ப)மலிங்கா 26(16)
பாட்யா-ரன் அவுட்-(குல்கர்னி) 2(3)
பிரட் லீ-அவுட் இல்லை- 2(3)
உதிரிகள் 6
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 147
விக்கெட் வீழ்ச்சி: 1-9(காலிஸ்), 2-13(காம்பிர்), 3-15(கோஸ்வாமி), 4-20(திவாரி), 5-80(யூசுப்), 6-121(சாகிப்), 7-131(பாட்யா).
பந்துவீச்சு: குல்கர்னி 4-0-32-1, முனாப் 4-0-27-3, ஹர்பஜன் 4-0-26-1, மலிங்கா 4-0-19-1, பிராங்க்ளின் 1-0-10-0, போலார்டு 3-0-31-0.
மும்பை இந்தியன்ஸ்
பிலிசார்டு(கே)அப்துல்லா(ப)பிரட் லீ 51(30)
சச்சின்(கே)திவாரி(ப)காலிஸ் 36(28)
ரோகித்-ரன் அவுட்-(காம்பிர்) 0(0)
ராயுடு(கே)கோஸ்வாமி(ப)காலிஸ் 12(16)
பிராங்க்ளின்-அவுட் இல்லை- 29(25)
போலார்டு எல்.பி.டபிள்யு.,(ப)சாகிப் 3(5)
சுமன்(கே)திவாரி(ப)சாகிப் 2(7)
ஹர்பஜன்-அவுட் இல்லை- 11(5)
உதிரிகள் 4
மொத்தம்(19.2 ஓவரில் 6 விக்.,) 148
விக்கெட் வீழ்ச்சி: 1-81(பிலிசார்டு), 2-82(ரோகித்), 3-92(சச்சின்), 4-103(ராயுடு), 5-123(போலார்டு), 6-133(சுமன்).
பந்துவீச்சு: பிரட் லீ 4-0-37-1, அப்துல்லா 3-0-23-0, யூசுப் 2-0-18-0, சாகிப் 3.2-0-24-2, பாட்யா 1-0-9-0, காலிஸ் 4-0-18-2, பாலாஜி 2-0-16-0.
Leave a Reply