சட்டசபையை கோட்டைக்கு மாற்றியது ஏன்?புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விளக்கம்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி:””அரைகுறையாக கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டடம் பாதுகாப்பானது அல்ல என்பதற்காகவே, தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் ஜெ., மாற்றினார்,” என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

தூத்துக்குடியில் அவர் கூறியதாவது:தொழில் வளர்ச்சி, நலத்திட்டம் வழங்குதல் இரண்டிலும் அ.தி.மு.க., அரசு சரிசமமாக செயல்பட்டு, இந்திய அளவில் நம் மாநிலம் முதல் மாநிலமாக திகழும் என நம்புகிறேன். மின்தட்டுப்பாட்டை போக்க, முதல்வர் ஜெயலலிதா அவசர நடவடிக்கை எடுப்பார்.அரைகுறையாக கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டடம் பாதுகாப்பானது அல்ல என்பதற்காகவே, தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் மாற்றியுள்ளார் என, கருதுகிறேன். இக்கட்டடம் மிகவும் பலம் வாய்ந்தது.

ஆனால், ஏதாவது சொல்லவேண்டுமென்பதற்காக பா.ம.க., ராமதாஸ், வீரமணி போன்றோர், சட்டசபை கட்டடத்தை மாற்றக்கூடாது என்கின்றனர். 2001 முதல், 2006 வரை, ஜெ., முதல்வராக இருந்தபோது சென்னை ராணி மேரி கல்லூரியில், புதிய சட்டசபை கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மாணவர் போராட்டம் என்ற போர்வையில், தி.மு.க., அதை தடுத்து நிறுத்தியது.

அதனால், கோட்டூர்புரத்தில் புதிய சட்டசபை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் வந்த தி.மு.க., அரசு, அங்கு சட்டசபை கட்டடத்தை கட்டவில்லை. பா.ம.க., ராமதாஸ், வீரமணி போன்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் வரலாறுகள் பள்ளி பாடத்தில் இடம்பெறலாம். அதற்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கவிதை, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் இடம் பெறுவதில் அர்த்தமில்லை.இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *