டமாஸ்கஸ் : சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியை, நேற்று, பீரங்கிப் படைகள் முற்றுகையிட்டன.
நாடு முழுவதும், பல்வேறு இடங்களில், பீரங்கிப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏராளமானோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம், கடந்த ஒரு வாரத்தில் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதான அரசின் வன்முறையும், மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் துவங்கிய இப்போராட்டத்தில், இதுவரை, 800 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில், 220 பேர், டரா நகரில் பீரங்கிப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருக்கக் கூடும் என, சிரியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
கடந்த 6ம் தேதி நண்பகல் தொழுகைக்குப் பின், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியான முவாதாமியாவை பீரங்கிப் படைகள் முற்றுகையிட்டன. இதனால், அந்நகர், டமாஸ்கசில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
நகரின் முக்கிய வீதிகளில் பீரங்கிகளும் வீரர்களும் நிறுத்தப்பட்டனர். உயரமான கட்டடங்களின் உச்சியில், நவீன ரக துப்பாக்கிகள் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து, நேற்று, அந்நகரில் பலர் கைது செய்யப்பட்டனர். நகரில் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன.
இதேபோல், அலப்போ, ஜெப்லா, பனியாஸ், ஹமா, ஹோம்ஸ் ஆகிய வடபகுதி நகரங்களும். தென்பகுதியில் உள்ள டராவும் பீரங்கிப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஹோம்ஸ் நகரில், வீடு வீடாகப் புகுந்து மக்களை போலீசார் கைது செய்தனர். பனியாஸ் நகரில் நேற்று குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
டராவில் நேற்று ஒரு மினிபஸ்சில், 10 பணியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தனர். இவர்கள் அனைவரும் அண்டை நாடான லெபனானைச் சேர்ந்தவர்கள். இதற்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தான் காரணம் என, ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
அதிபர் அசாத் நேற்று அளித்த பேட்டியில், “விரைவில் இப்பிரச்னை முடிவுக்கு வந்து விடும். நிர்வாக, அரசியல் மற்றும் ஊடகச் சுதந்திரங்கள் முன்னேற்றப்படும்’ என தெரிவித்தார்.
Leave a Reply