சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில், 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பேட்டிங்கில் ஏமாற்றிய கொச்சி அணி, தோல்வி அடைந்து ஏமாற்றியது.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற சென்னை
கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
பார்த்திவ் கேப்டன்:
கொச்சி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுவிட்டதால், பார்த்திவ் படேல் அணியை வழிநடத்தினார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கொச்சி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. பரமேஸ்வரன், பிரசாந்த், ஜெயவர்தனா நீக்கப்பட்டு, முத்தையா முரளிதரன், வினய் குமார், ஜாதவ் தேர்வு செய்யப்பட்டனர்.
ரெய்னா ஏமாற்றம்:
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஆர்.பி. சிங் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில், மூன்று “பவுண்டரி’ விளாசிய முரளி விஜய் (16), அதே ஓவரில் “போல்டானார்’. அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, அதிரடியாக ரன் சேர்த்தார். ஸ்ரீசாந்த் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில், 2 “சிக்சர்’, ஒரு “பவுண்டரி’ அடித்த ரெய்னா (19), அதே ஓவரில் ஆர்.பி. சிங்கிடம் “கேட்ச்’ கொடுத்து வெளியேறினார்.
“சபாஷ்’ சகா:
பிராட் ஹாட்ஜ் சுழலில் ஒரே ஒரு “சிக்சர்’ அடித்த பத்ரிநாத் (13), நீண்டநேரம் நிலைக்கவில்லை. பின் இணைந்த மைக்கேல் ஹசி-விரிதிமன் சகா ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. பொறுப்பாக ஆடிய இந்த கூட்டணி, நான்காவது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த போது மைக்கேல் ஹசி (32), ரவிந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் தோனி (9), ஜடேஜா பந்தில் பார்த்திவ் படேலிடம் “கேட்ச்’ கொடுத்து ஏமாற்றினார். ஜடேஜா, முரளிதரன், ஆர்.பி. சிங் பந்தில் தலா ஒரு “சிக்சர்’ விளாசிய சகா, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சென்னை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. விரிதிமன் சகா (46), ஆல்பி மார்கல் (13) அவுட்டகாமல் இருந்தனர். கொச்சி அணி சார்பில் ரவிந்திர ஜடேஜா 2, ஆர்.பி. சிங், ஸ்ரீசாந்த், பிராட் ஹாட்ஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பார்த்திவ் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு, கேப்டன் பார்த்திவ் படேல் (6) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த ஞானேஸ்வரா ராவ் (19) நீண்டநேரம் நிலைக்கவில்லை. போலிஞ்சர் பந்தில் இரண்டு “பவுண்டரி’ அடித்த பிரண்டன் மெக்கலம், நிதானமாக ரன் சேர்த்தார். இவர், 37 பந்தில் 33 ரன்கள் எடுத்த போது, ஜகாதி சுழலில் “போல்டானார்’.
ஹாட்ஜ் அபாரம்:
பின் இணைந்த பிராட் ஹாட்ஜ், ரவிந்திர ஜடேஜா ஜோடி, பெரிய அளவில் சாதிக்கவில்லை. போலிஞ்சர் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் ஒரு “சிக்சர்’, ஒரு “பவுண்டரி’ அடித்த ஜடேஜா (19), அதே ஓவரில் ரெய்னாவிடம் “கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராட் ஹாட்ஜ், பிராவோ பந்தில் அடுத்தடுத்து இரண்டு “சிக்சர்’ அடிக்க, கடைசி 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த கொச்சி அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பிராட் ஹாட்ஜ் (51), ஜாதவ் (1) அவுட்டகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அஷ்வின், போலிஞ்சர், ஜகாதி, பிராவோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
மைக் ஹசி (கே)ஞானேஸ்வரா (ப)ஜடேஜா 32(37)
முரளி விஜய் (ப)ஆர்.பி. சிங் 16(11)
ரெய்னா (கே)ஆர்.பி. சிங் (ப)ஸ்ரீசாந்த் 19(13)
பத்ரிநாத் (கே)ஆர்.பி. சிங் (ப)ஹாட்ஜ் 13(10)
சகா -அவுட் இல்லை- 46(33)
தோனி (கே)பார்த்திவ் (ப)ஜடேஜா 9(6)
ஆல்பி -அவுட் இல்லை- 13(10)
உதிரிகள் 4
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 152
விக்கெட் வீழ்ச்சி: 1-19(முரளி விஜய்), 2-40(ரெய்னா), 3-60(பத்ரிநாத்), 4-97(மைக் ஹசி), 5-116(தோனி).
பந்துவீச்சு: ஆர்.பி. சிங் 4-0-34-1, ஸ்ரீசாந்த் 3-0-23-1, முரளிதரன் 4-0-26-0, ஹாட்ஜ் 3-0-24-1, வினய் குமார் 2-0-17-0, ஜடேஜா 4-0-26-2.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
பார்த்திவ் (கே)ஆல்பி (ப)அஷ்வின் 6(7)
பிரண்டன் (ப)ஜகாதி 33(37)
ஞானேஸ்வரா (கே)+(ப)பிராவோ 19(17)
ஹாட்ஜ் -அவுட் இல்லை- 51(42)
ஜடேஜா (கே)ரெய்னா (ப)போலிஞ்சர் 19(13)
ஓவைஸ் -ரன் அவுட்-(தோனி/போலிஞ்சர்) 3(3)
ஜாதவ் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 141
விக்கெட் வீழ்ச்சி: 1-11(பார்த்திவ்), 2-45(ஞானேஸ்வரா), 3-83(பிரண்டன்), 4-115(ஜடேஜா), 5-137(ஓவைஸ்).
பந்துவீச்சு: அஷ்வின் 4-0-16-1, போலிஞ்சர் 4-0-38-1, ஜகாதி 4-0-23-1, பிராவோ 4-0-36-1, ரெய்னா 4-0-26-0.
Leave a Reply