செய்யாத குற்றத்துக்கு தண்டனை: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: “”செய்யாத குற்றத்துக்கு தண்டனை அளித்துள்ளனர்,” என்று, கனிமொழி கைது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

* ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியின் ஜாமின் மனு டில்லி கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே; அதுபற்றி?

அது கோர்ட் விவகாரம்; நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

* காங்கிரஸ் உடன் உங்கள் உறவு தற்போது எப்படி இருக்கிறது?

எல்லாருடனும் நல்ல உறவு இருக்கிறது.

* இந்தத் தீர்ப்பால் காங்கிரசுடன் உங்களுக்கு உள்ள உறவு பாதிக்குமா? என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்? இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா?

தி.மு.க., ஒரு ஜனநாயக இயக்கம்; நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியில் செயற்குழு, பொதுக்குழு கூடி தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.

* செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப் போகிறீர்கள்?

தேவைப்படும் போது கூட்டுவோம்.

* உங்கள் மகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே; உங்கள் மனநிலை எப்படி உள்ளது?

உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ, அந்த மனநிலையில் என் மனம் உள்ளது.

* இந்த தீர்ப்பு குறித்து டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போகிறீர்களா?

சட்ட வல்லுனர்களை ஆலோசித்து முடிவெடுப்பேன்; பொறுத்திருந்து பாருங்கள்.

* உடனே டில்லி போகிறீர்களா?

இப்போது நான் போகவில்லை.

* தேர்தலில் உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

மக்கள் நல்ல ஓய்வு கொடுத்துள்ளனர். இவ்வாறு கருணாநிதி பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *