ஏழை, நடுத்தர மக்களின், “சொந்த வீடு’ கனவு, கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது; கட்டுமானப் பொருள்கள் விலை கவலை கொள்ள வைக்கிறது.
தமிழகத்தில், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் பிரச்னைகள், அவற்றை தீர்க்க ஆட்சியாளர்கள் மேற்கோள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ரகுநாதன் தெரிவித்த கருத்துகள்: எவ்வித வரைமுறையும் இன்றி குறிப்பிட்ட சிலரால், நிலம் மற்றும் கட்டுமானப் பொருள்கள் விலை உயர்த்தப்பட்டது; அதிகரித்துள்ள அரசியல் தலையீடு; லஞ்ச ஊழல் ஆகியவற்றால் கட்டுமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்துறை பாதிக்கப்படுவதோடு, இதன் முழுச் சுமையும், நடுத்தர வர்க்கத்தினர் தலையில் தான் விழுகிறது. கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமானது சிமென்ட். அனைத்து செலவுகளையும் சேர்த்து, 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சிமென்டுக்கான அடக்க விலை, 180 ரூபாயாக உள்ளது. ஆனால், சிமென்ட் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள், கூட்டணி அமைத்து, எவ்வித காரணமும் இன்றி, சிமென்ட் விலையை உயர்த்தி வருகின்றனர். இதனால், ஒரு மூட்டை சிமென்டின் விலை, 285 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, சிவில் சப்ளை துறை மூலம், நேரடியாக சிமென்ட் விற்பனை செய்யப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. சிமென்ட் உற்பத்தியாளர்களை, அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்நிலையை கட்டுப்படுத்த, கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்து நேரடியாக அரசு விற்பனை செய்ய வேண்டும். மேலும், கட்டுமானத் துறையினர் இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். அடுத்ததாய், மணல் வினியோகமும் சீராக இல்லாததால், கட்டுமானத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணல் சரிவரக் கிடைப்பதில்லை. புதிய குவாரிகள் அடையாளம் காணப்படாததால், மணல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், மணல் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மணலுக்கான பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், கருங்கல் தூளை மணலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசு சார்ந்த கட்டுமான பணிகளில், குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே, சோதனைக்கு பிறகு கருங்கல் தூள் பயன்படுத்த அரசு அனுமதியளித்துள்ளது. இதை, அனைத்து பணிகளுக்கும் அதிகளவில் பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
மணல் குவாரிகள் அரசுடமையாக்கப்பட்டிருந்தாலும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மாபியா கும்பல்களின் ஆதிக்கத்திலேயே மணல் வினியோகம் உள்ளது. கட்டுமானப் பணிக்கு தேவையான கம்பிகள் விலையும், தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை, பெரியளவிலான கட்டுமான திட்டங்கள் அனைத்துக்கும் சி.எம்.டி.ஏ.,விடம் தான் வரைபட அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது; இந்த அனுமதி விரைவாக கிடைப்பதில்லை. இதற்காக அனைத்து கட்டுமான திட்டங்களுக்கான வரைபட அனுமதியையும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலமே வழங்க வேண்டும். இதை, உள்ளாட்சி அமைப்புகள் சரிவர செயல்படுத்துகின்றனவா என்பதை கண்காணிக்கும் அமைப்பாக, சி.எம்.டி.ஏ., செயல்படலாம். அப்போது தான் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெற விண்ணப்பிக்கும் போது, அது தொடர்பான நடவடிக்கைகள் அதிகாரிகள் மூலமே நடக்கிறது. இறுதியில், அனுமதி கடிதம் வழங்குவதில், அரசியல் பிரமுகர்கள் தலையீடு அதிகமாக உள்ளது; இது, லஞ்ச ஊழலுக்கு வழி வகுக்கிறது.
தமிழகத்தில், தற்போது வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தி, அவர்களை இப்பணியில் ஈடுபடுத்தலாம். அவர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக, “தமிழ்நாடு கட்டுமான பயிலகம்’ என்ற நிறுவனம் செங்கல்பட்டு அருகே அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கான நிலமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஏனோ பயிலகத்திற்கான பணிகள் நடைபெறவில்லை; இதையும் விரைவுப்படுத்த வேண்டும். அரசின் உள்கட்டமைப்பு மற்றும் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் சென்னையை மட்டுமே மையப்படுத்தி இருப்பதால், இங்கு நிலத்தின் விலை பலமடங்கு அதிகரித்து விட்டது. நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வளர்ச்சியை பரவலாக்கும் வகையில், சென்னைக்கு வெளியே துணை நகரங்கள் அமைக்கும் திட்டத்தை, துணிவுடன், அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நகருக்கு வெளியே புதிய திட்டங்களை அறிவித்து, விரைந்து செயல்படுத்த வேண்டும். கட்டுமானத் துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை நேரடியாக கவனிக்க, தகுந்த ஏற்பாடு அரசில் இல்லை; ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு துறையை சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. இதை தீர்க்க, கட்டுமானத் துறைக்கென, தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும். “ரியல் எஸ்டேட்’ துறை அதிகளவு முதலீடுகளை ஈர்க்க கூடிய வகையில் உள்ளது. அதே சமயம், இதில் முறைகேடுகளும் அதிகளவில் நடைபெறுகிறது. எனவே, இத்துறையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து, அரசு முறைப்படுத்த வேண்டும். இத்துறை வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். வீடுகளுக்கான கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கு தர நிர்ணயம் செய்யப்படுவதே இல்லை. இதை மாற்றி, கட்டடங்களுக்கு ஏற்ற வகையில், அரசே இதற்கான அளவுகளை நிர்ணயம் செய்து, அவற்றின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும்; இது, பொதுமக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவும்.
Leave a Reply