சோம்நாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் மம்தா :குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து உற்சாகம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி வீட்டுக்கு சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றது, மார்க்சிஸ்ட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மா.கம்யூ., மூத்த தலைவர்களில் ஒருவர் சோம்நாத் சட்டர்ஜி. லோக்சபா சபாநாயகராகவும் பதவி வகித்தார். கட்சி மேலிடத்துக்கும், அவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, கட்சியில் இருந்து, அவர் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தீவிர அரசியலில் இருந்து, அவர் ஒதுங்கியிருந்தார்.இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி, அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. மம்தா, முதல்வராக பதவியேற்கவுள்ளார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், கோல்கட்டாவில் உள்ள சோம்நாத் சட்டர்ஜியின் வீட்டுக்கு, நேற்று முன்தினம் இரவில், மம்தா பானர்ஜி சென்றார். மம்தாவின் வருகையை, சோம்நாத் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், அவரை வரவேற்று, வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.இதன்பின், மம்தா, தான் கொண்டு வந்திருந்த இனிப்புகளை, சோம்நாத் குடும்பத்தினரிடம் அளித்தார். பூங்கொத்தையும் கொடுத்து, சோம்நாத்திடம் வாழ்த்து பெற்றார்.தனது மனைவி ரேணு, மகள் அனுஷிலா, மகன் பிரதாப், மருமகள் சகுந்தலாவை, மம்தாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மம்தாவுக்கு, பழரசம் கொடுக்கப்பட்டது. அதை விருப்பத்துடன் வாங்கி அருந்தினார். சோம்நாத் குடும்பத்தினருடன், மம்தா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரை மணி நேரத்துக்கு பின், சோம்நாத்திடம் விடை பெற்று விட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இது குறித்து, சோம்நாத் சட்டர்ஜி கூறியதாவது:மம்தா என் வீட்டுக்கு வந்து, வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அவர், முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு ஏராளமான பணிகள் உள்ளன. இருந்தாலும், எனக்காக நேரம் ஒதுக்கி, இங்கு வந்தது, மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.

சோம்நாத் சட்டர்ஜியை, மம்தா சந்தித்தது, மார்க்சிஸ்ட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், கட்சியின் மாநில தலைவர் கவுதம் தேவ் கூறுகையில், “இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. மம்தாவின் தேர்தல் வெற்றிக்கு, நான் கூட போனில் வாழ்த்து தெரிவித்தேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *