ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

posted in: அரசியல் | 0

முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மேம்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொடுத்திருப்பதற்கு காலமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. கடந்த 10 வருடமாக டவுண் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றினேன். இப்போது முதல்-அமைச்சர் எனக்கு அதை விட முக்கிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். அதற்கு நான் தகுதி உள்ளவராக செயலாற்றுவேன்.

3-வது முறையாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். பின்தங்கிய ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

படித்த, ஏழை பெண்கள், பட்டதாரி, டிப்ளமோ படித்த பெண்கள் திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் போன்ற திட்டங்கள் சமூக நலத்துறையின் கீழ் பெண்களுக்கு முழுமையாக சென்றடைய பாடுபடுவேன்.சத்துணவு, அங்கன்வாடி ஊட்டச்சத்து துறை பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக செயல்படுத்தப் படவில்லை. அரசு மருத்துவமனைகளில் தொட்டில் குழந்தைகளை பாதுகாக்கவும், பின்னர் காப்பகங்களில் பராமரித்து வளர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்திற்கு தேவையானவற்றை செய்து மேம்படுத்தப்படும்.

இவ்வாறு செல்வி ராமஜெயம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *