டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது கூறப்பட்டு தேர்தல் விதி மீறல் புகார்களை அப்படியே விட்டு விடுவது என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
தேரத்ல் பிரசாரத்தின்போது அவதூறாகப் பேசியதாக கூறி ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மீது அதிமுகவும், மு.க.ஸ்டாலின் மீது திமுகவும் புகார் கொடுத்தன.
இதையடுத்து மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம். அவர்களும் விரிவான பதிலை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்போது இவர்களது விளக்கத்தை ஏற்றுக் கொண்டு இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துள்ளது.
இதுதொடர்பான முடிவை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் ஆணையர்கள் வி.எஸ்.சம்பத் மற்றும் பிரம்மா ஆகியோர் அடங்கிய ஆணையம் எடுத்துள்ளது.
மூன்று தலைவர்களும் முன்னதாக கொடுத்திருந்த விளக்கத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பதிலையே தெரிவித்திருந்தனர். தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசவில்லை என்றும், சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் தலைவர்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மட்டுமே விமர்சித்துப் பேசியிருந்ததாக அவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply