தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிக்கும்

posted in: கல்வி | 0

சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார்.

அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி, பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை உடனே நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், சமச்சீர் கல்வி திட்ட அறிவிப்பை, தி.மு.க., வெளியிட்டது. அதன்படி, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்விக்கென சட்டம் கொண்டு வரப்பட்டு, அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வரும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு, பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பள்ளி கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி.சண்முகம், டி.பி.ஐ., வளாகத்தில் துறை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்திற்கு பின், அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது: பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் உரிய பாடப் புத்தகங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், இந்த அரசு பார்த்து கொள்ளும்.

புதிய கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், புதிய கட்டணம் அறிவிக்கப்படும் என்றார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளிவரும்? என்று கேட்டதற்கு, பணிகள் இன்னும் முடியவில்லை. பணிகள் நிறைவடைந்ததும், முன்கூட்டியே தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து, அமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ள கருத்து மூலம், இத்திட்டம் வரும் கல்வியாண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய பல பகுதிகள், 9, 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. செம்மொழி மாநாடு, கவிதை நடை உரைநடை, செம்மொழிப் பாடல், கருணாநிதி பற்றிய குறிப்புகள் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும், நீக்கப்பட்ட பகுதிகளாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. வரும், 2012-13ம் கல்வியாண்டில், புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடும் போது, கருணாநிதி சம்பந்தப்பட்ட பகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டு அச்சிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *