தலைமைச் செயலக மாற்றத்தை எதிர்த்த வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை : தலைமைச் செயலகம், சட்டசபையை, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையை, ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது. ஐகோர்ட் வக்கீலான டாக்டர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு:

வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி: ஓமந்தூரார் எஸ்டேட்டில் இருந்து தலைமைச் செயலகம், சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

நீதிபதிகள்: அதற்கான அரசு உத்தரவு எங்கே உள்ளது?

வக்கீல் கிருஷ்ணமூர்த்தி: எல்லா பத்திரிகைகளிலும் இதுகுறித்து செய்தி வெளிவந்துள்ளது.

நீதிபதிகள்: பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட முடியுமா? அப்படியென்றால், அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி முடிவெடுக்கப்படும் என முதல்வர் கூறியதாக, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. தற்போது, இந்த விஷயத்தில் நாங்கள் குறுக்கிட முடியாது.

வக்கீல் நவநீதகிருஷ்ணன்: அ.தி.மு.க., பொதுச் செயலரை இந்த வழக்கில் சேர்த்திருக்க வேண்டிய அவசியமில்லை; அதை நீக்க வேண்டும்.

வக்கீல் கிருஷ்ணமூர்த்தி: அவரது உத்தரவின்படி தான் தலைமைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயலர் செயல்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்க அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேஷ், அ.தி.மு.க., பொதுச் செயலர் சார்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். விசாரணையை அடுத்த மாதம் 15ம் தேதிக்கு, “டிவிஷன் பெஞ்ச்’ தள்ளிவைத்தது.

ஐகோர்ட்டில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு: ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் 1,100 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த தலைமைச் செயலகம், சட்டசபை, ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரும், புதிய கட்டடத்தில் தான் நடந்தது. புதிய தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும் ஓமந்தூரார் எஸ்டேட்டில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதில், புதிய அரசு பிடிவாதமாக இருப்பது தெரிகிறது. இது, பொது மக்களின் நலனுக்கு எதிரானது. பொது மக்களின் பணத்தை வீணடிக்கக் கூடாது. எனவே, தலைமைச் செயலகம், சட்டசபை வளாகத்தை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *