திருட்டு கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை:உஷார் ரிப்போர்ட்

posted in: உலகம் | 0

டெல்லி: இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்படும் பெரும்பாலான சொகுசு கார்கள், வெளிநாடுகளிலிருந்து திருடி கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக, விசாரணை நடத்தி வரும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் (டி.பி.ஐ), இதுவரை வெளிநாடுகளிலிருந்து திருடி கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட 40 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்றின் ஆவணங்களை டி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தபோது இந்த நூதன மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. திருடப்படும் காருக்கான ஆவணங்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த கார் போலியான முகவரியில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, உஷாரான வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ,லம்போர்கினி,அஸ்டன் மார்ட்டின், ஃபெராரி உள்ளிட்ட நிறுவனங்களின் பெரும்பாலான சொகுசு கார்கள் ஐரோப்பா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திருடப்பட்டுள்ளது. பின்னர், அந்த கார்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கார்கள் இடதுபுற டிரைவிங் கொண்டது என்பதால், டி.பி.ஐ. அதிகாரிகளுக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது. ஆனால், மூளையை தீட்டி அவர்கள் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் திருடப்படும் கார்கள் துபாய் கொண்டுவரப்பட்டு, அங்கு இந்தியாவுக்கு தகுந்தவாறு வலதுபுற டிரைவிங்காக மாற்றி பின்னர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த சுமித் வாலியாஸ் என்பவன் இந்த மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளான். தற்போது தலைமறைவாக உள்ள சுமித் வாலியாசுக்கு ஐரோப்பிய மற்றும் தென்ஆப்பிரிக்க திருட்டு கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

மேலும், அங்கிருந்து இந்தியா அனுப்பப்படும் கார்களுக்கு போலி ஆவணங்களை தயார் செய்து இந்தியாவில் இறக்குமதி செய்து விற்றுள்ளான். இதுபோன்று போலியான ஆவணங்களுடன் விற்பனை செய்யப்பட்ட 40 கார்களை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள இறக்குமதி கார்களில் 300 முதல் 400 கார்கள் வரை திருட்டு கார்களாகத்தான் இருக்கமுடியும் என டி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, இதுகுறித்த விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

இதில், வேடிக்கையான விஷயமே, மோசடி கும்பலிடம் கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து ஏமாந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாலிவுட் நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும்தான் என வருவாய் புலனாய்வு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *