இஸ்லாமாபாத்: டாடா நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய அந்த நாட்டை சேர்ந்த பிரபல வர்த்தகம் குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆனால், இரு நாட்டு வர்த்தக கொள்கைகள் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதால், அதை தளர்த்துமாறு, இரு நாட்டு அரசுகளுக்கும் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த இன்டர்நேஷனல் மல்டி குரூப் ஆப் கம்பெனீஸ்(ஐ.எம்.ஜி.சி.)நிறுவனம் எண்ணெய் மற்றும் சினிமா இறக்குமதி வர்த்தகத்தில் சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.எம்.ஜி.சி. தலைவர் அம்ஜத் ரஷீத் கூறியதாவது:
“நானோ கார் மற்றும் சி.என்.ஜி.இயங்கும் பஸ்களை பாகிஸ்தானில் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்து டாடா மோட்டார்சுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான வர்த்தக கொள்கைகள் இதற்கு தடையாக உள்ளன.
பாகிஸ்தான் அரசின் வர்த்தக கொள்கைகளின்படி, குறைந்த அளவு மட்டுமே வாகனங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். ஆனால், கூட்டு குழுமத்தின் வாயிலாக அசெம்பிளிங் தொழிற்சாலை அமைத்தால் வெளிநாட்டு வாகனங்களை இங்கு விற்பனை செய்ய இயலும்.
அதேவேளை, இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, இந்திய நிறுவனம் பாகிஸ்தானில் கூட்டு குழும அடிப்படையில் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. எனவே, டாடாவின் நானோ கார் மற்றும் சி.என்.ஜி. பஸ்களை பாகிஸ்தானில் விற்பனை செய்ய ஏற்ற வகையில் விதிகளை தளர்த்தி தருமாறு இருநாட்டு அரசுகளிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.
டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளை பாகிஸ்தானில் விற்பனை செய்ய ஆவலாக இருக்கிறோம். இரு நாட்டு அரசுகளிடமிருந்தும் அனுமதி கிடைத்தால், நானோ கார் மற்றும் சி.என்.ஜி. பஸ்களை உடனடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
Leave a Reply