பெங்களூரு : கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசு பதவியேற்று, நேற்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்தன.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் மூத்த தலைவரான எடியூரப்பா, முதல்வராக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக, எடியூரப்பா அரசுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. பா.ஜ., மூத்த அமைச்சர்களான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி ஆகியோர், 2009ம் ஆண்டில், எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். “எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என, வலியுறுத்தினர். இதனால், எடியூரப்பா அரசு கவிழும் நிலை ஏற்பட்டது.
பா.ஜ., மேலிடம் தலையிட்டதை அடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. இதன் பின், எடியூரப்பா அரசுக்கு ஆதரவு அளித்து வந்த, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர், ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால், நெருக்கடி ஏற்பட்டது. இவர்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், “எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது’ என, உத்தரவிட்டது. இதனால், எடியூரப்பா அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், எடியூரப்பாவை ஆதரிப்பதாக, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், “எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு, கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என கவர்னர் பரத்வாஜ், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். கவர்னரின் இந்த அறிக்கையை, மத்திய அரசு நிராகரித்தது. எடியூரப்பா அரசுக்கு இதுபோல் தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. இந்த நெருக்கடியை வெற்றிகரமாக முறியடித்து, தற்போது நான்காவது ஆண்டில், எடியூரப்பா அரசு அடியெடுத்து வைத்துள்ளது.
Leave a Reply