திருப்பூர் : “”நூல் வாங்குவது முதல் மார்க்கெட்டிங் வரை, அனைத்து நேரங்களிலும் பயன்பெறும் வகையிலான, புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,” என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், “மைக்ரோசாப்ட்’ மற்றும் “விப்ரோ’ நிறுவனங்கள் சார்பில், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், “புராஜக்ட் விகாஸ்’ திட்டம் வாயிலாக, புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக, சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி, நிதி, ஏற்றுமதி, பையர் மற்றும் விற்பனையாளர் உறவுகள், மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளை மேம்படுத்தி, உற்பத்தி திறன் ஊக்குவிக்கப்படும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது: தற்போதுள்ள தொழில் போட்டிகளை சமாளிக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதற்காக, 2007ம் ஆண்டில், “புராஜக்ட் விகாஸ்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. “மைக்ரோசாப்ட்’ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, தகவல் பரிமாற்றம் செய்யப் பட்டது. இதன் மூலமாக, உற்பத்தியாளர்களின் திறன் மேம்படுத்த முயற்சிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் அந்நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த தலைமுறையினர் வசதிக்காக, குறைந்த செலவில் பயனடைய “சாப்ட்வேர்’ சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தி மேம்பாட்டுக்காக, பெரிய நிறுவனங்கள் 75 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து, இ.ஆர்.பி., வடிவமைக்கின்றன. சிறு, குறு நிறுவனங்களால் அது முடியாது என்பதால், “மைக்ரோசாப்ட்’ மற்றும் “விப்ரோ’ நிறுவனங்களுடன் இணைந்து புதிய வசதி செய்யப் பட்டுள்ளது. இன்றைய “சாப்ட்வேர்’ துறை மூலமாக, சேவையை எளிதாக்கக்கூடிய, கலை நயமான திட்டம். தற்போதைய நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்கி, ஜவுளித்துறையை மேம்படுத்தலாம். பஞ்சு, நூல் வாங்குவதில் துவங்கி, நிட்டிங், டையிங், காம்பாக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரிங் “பிராசசிங்’ பணிகள், விற் பனை, மார்க்கெட்டிங் என அனைத்து பணி களையும், இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொண்டு உற்பத்தி செய்யலாம். இதற்காக, இரண்டு கம்ப்யூட்டர்களை வாங்கினால் போதும்; மாதக்கட்டண நிர்ணய அடிப்படையில், அனைத்து சேவைகளையும் பெறலாம், என்றார்.
“விப்ரோ’ பொது மேலாளர் அனந்தராமகிருஷ்ணன் பேசுகையில்,””திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் தேவையை தெரிந்துகொண்டு, “ஜிடெக் இன்போ சொல்யூசன்ஸ்’ நிறுவனம், அதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலமாக, திருப்பூர் வர்த்தகம் வளர்ச்சி பெறும். சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பயனடையும். குறைந்த கட்டணத்தில், நவீன தகவல் தொடர்பு மூலமாக, அபார வளர்ச்சி பெற முடியும்,” என்றார்.
“மைக்ரோசாப்ட்’ (ஆன்லைன் வர்த்தகம்) இயக்குனர் ராஜிவ்ஜோதி பேசுகையில்,” “இந்திய ஜவுளித்துறையின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கூட்டு முயற்சி மேற்கொள்கிறோம். “மைக்ரோ சாப்ட்’ நிறுவனத்தின் நம்பகத்தன்மையுடன், நிறுவனங்கள் நம்முடன் ஒருங்கிணைகின்றன. எவ்வகையிலும், ரகசிய தகவல்கள் வெளியே வராது.தொழில் நிறுவனங்கள் சுதந்திரமாக, தங்களது கூட்டாளிகளுடன், சேவையை பரிமாறிக் கொள்ளலாம்,” என்றார்.
“ஜி டெக் இன்போ சொல்யூசன்ஸ்’ தலைவர் சஞ்சய்குமார் கூறுகையில், “”போட்டி நிறைந்த சூழலில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் தேவையான தொழில்நுட்பங்களை பெற முடிவதில்லை. அத்தகைய நிறுவனங்கள் லாபம் அடையும் வகையில், ஜி டெக் நிறுவனம் திட்டங்களை தயாரித்துக் கொடுத்துள்ளது. இந்தியாவில், எட்டு மில்லியன் சிறு, குறு நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக உள்ளன. தொழில் உற்பத்தியில் 40 சதவீத பங்கை அளிப்பதுடன், 45 சதவீத ஏற்றுமதிக்கும் உறுதுணையாக இருப்பர்,” என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி கூறுகையில்,” “அனைத்து தகவல்களை பதிவு செய்து வைத்திருந்தாலும், முறை கேடாக யாரும் அதை பயன்படுத்த முடியாது. இந்திய வர்த்தகம் திறந்த நிலையில் இருப்பதால், எளிதாக பிறரை தொடர்பு கொண்டு, தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதனால் வர்த்தக வாய்ப்பு தானாக தேடிவரும். இத் தகைய “சாப்ட்வேர்’ பயன்பாட்டின் மூல மாக, பின்னலாடை வர்த்தகம் 10 மடங்கு அதிகரிக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
Leave a Reply