கோவை : “ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் தளர வேண்டியதில்லை.
உடனடியாக மறுதேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்,” என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மனம் தளர வேண்டாம்:
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அதுகுறித்து ஆனந்தி கூறுகையில், “தேர்வில் வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வி அடைந்த மாணவர்களும், எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மனம் தளர்ந்து விட வேண்டியதில்லை. அவர்கள் உடனடி தேர்வு எழுதுவதன் மூலம் நடப்புக் கல்வியாண்டிலேயே மேற்படிப்பினைத் தொடரலாம். விரும்பிய படிப்பில் சேர முடியவில்லையே என்று கவலைப்படாமல், கிடைத்த படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றால், எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.
நல்ல படிப்பை தேர்வு செய்யுங்கள்:
மருத்துவர், பொறியாளர் பணிகளைப் போலவே ஏராளமான சிறந்த பணிகள் நாட்டில் உள்ளன. பி.ஏ., தமிழ் எடுத்து படித்தாலும் அதன் பின் ஐ.ஏ.எஸ்., போன்ற அரசு தேர்வுகள் எழுதி நல்ல நிலையை அடைய முடியும். எனவே எதிர்கால வாழ்வு வளமாக அமைய நல்ல படிப்புகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
நாளை விண்ணப்பம்:
உடனடி தேர்வுகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது. மூன்று பாடங்களுக்கு மேல் தோல்வி அடைந்த மாணவர்கள், உடனடி தேர்வு எழுத அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள வேண்டும். மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மே 11 முதல் 16 வரை கோவை சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் ஆனந்தி
Leave a Reply