மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை அன்று. ஆனால் தாய் மொழியாம் தமிழ்ப் பாடத்திலேயே தோல்வியைத் தழுவுவோர் சங்கம் வைக்கும் அளவுக்கு பெருகி வருகின்றனர் இன்று.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதைப் பார்த்த மதுரை மாணாக்கர்கள் பலருக்கும் அதிர்ச்சி. காரணம், பலர் தமிழில் பெயில் ஆகியுள்ளனர்.
இந்த ஆண்டு பிளஸ்டூ தமிழ்ப் பாடத்தில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 209 ஆகும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் பெரும் வருத்தமும், கவலையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு தமிழில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. 2010ல் இது 111 ஆக எகிறியது. .இன்த ஆண்டு 209 ஆக உயர்ந்து தமிழ் ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையில் இப்படி ஒரு அவலமா என்ற அதிர்ச்சி அலைகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து விரிவான அறிக்கை தருமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரத்னமாலாவுக்கு ஆட்சித் தலைவர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சகாயம் கூறுகையில், தாய் மொழியிலேயே மாணவ, மாணவியர் தோல்வி அடைவது என்பது பெரும் கவலைக்குரிய விஷயமாகும். இதற்கான தீர்வு காணப்பட்டே ஆக வேண்டும். இந்த நிலையை மாற்றியாக வேண்டும். தமிழில் மாணவர்கள் அதிக அளவில் பெயிலாவது குறித்த காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
அதேசமயம், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மதுரையில் அதிகரித்து வருகிறதாம். கடந்த 2010ல் ஆங்கிலத்தில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 601 ஆக இருந்தது. இந்த ஆண்டு வெறும் 284 பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரத்னமாலா கூறுகையில், ஆங்கிலப் பாடத்தில் அதிக அளவில் பெயிலாகி வருவதால் அதைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தாய் மொழியில் மாணவர்கள் கோட்டை விட்டு விட்டனர். வார்த்தைப் பிழை, இலக்கணப் பிழை காரணமாகத்தான் நிறையப் பேர் பெயிலாகியுள்ளனர் என்று கருதுகிறோம் என்றார்.
Leave a Reply