மயிலாப்பூரில் தங்கபாலு வேட்பாளரானது எப்படி? காங்., மேலிடம் விசாரணை

posted in: அரசியல் | 0

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குறித்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு சரமாரியாக குவியும் புகார்கள் நின்றபாடில்லாத சூழ்நிலையில், ஆசாத் மற்றும் வயலார் ரவி போன்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தவிர, தங்கபாலு மயிலாப்பூர் வேட்பாளராக எப்படி கடைசி நேரத்தில் ஆனார் என்பது குறித்தும் விசாரணை நடந்துள்ளதாக தெரிகிறது. மனு தாக்கல் செய்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரி அளித்த ரசீதுகளையும் ஆய்வு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்தும் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த விமர்சனங்கள் எழுந்தன.மனு தாக்கல் முடிந்தவுடன், அடுத்த பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்படவே, திடீர் வேட்பாளராக தங்கபாலு ஆனார். பலரையும் ஆச்சரியத்தில் தள்ளினாலும், இந்த திடீர் மாற்றத்தை தொடர்ந்து, நியாயப்படுத்தியபடியே தங்கபாலு இருந்தார். தேர்தல் முடிந்த மறுநாளே 19 பேரையும் கட்சியை விட்டு நீக்கினார். இதையடுத்து, அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென, எல்லா கோஷ்டிகளும் ஒருசேர திரண்டுள்ளன. சிதம்பரம்,வாசன்,இளங்கோவன் போன்றோர் சோனியாவை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். இருப்பினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே தங்கபாலு விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படும் சூழ்நிலையில், தற்போது புதிய தகவல்கள் பல கசிந்துள்ளன.

இதுகுறித்து டில்லியில் காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறியதாவது:ஒவ்வொரு தேர்தலிலும் பிரசார கமிட்டி என்ற ஒன்று அமைக்கப்படும். அதுபோன்ற தேர்தல் கமிட்டி எதுவும் அமைக்கப்படவில்லை. சிதம்பரம், வாசன், இளங்கோவன் ஆகிய மூவர் மட்டுமே தமிழகம் முழுக்க பிரசாரம் செய்தனர். தலைவராக இருந்த தங்கபாலு சென்னையில் சோனியா கலந்து கொண்ட கூட்டத்திலும் ஈரோடு, கரூர் ஆகிய ஊர்களில் நடந்த ராகுல் கூட்டத்திலும் மட்டுமே பங்கேற்றார்.இந்த தேர்தலில் தன்னுடைய கோட்டாவாக பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை தங்கபாலு பெற்று அவரது ஆதரவாளர்களை நிறுத்தினார். இவர்களுக்கு இந்த நிதியும் பொருட்களும் போய்ச் சேரவில்லை என்றும், சொந்தமாகவே செலவு செய்து கொள்ளும்படி கூறிவிட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

சாந்தாராம்நாயக்,விஜயலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி என மூன்று பேர் மேலிடப் பார்வையாளர்களாக டில்லியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் யாருமே தொகுதிகளுக்கு செல்லவே இல்லை. சென்னையிலேயே இருந்து கொண்டனர்.வயலார் ரவி இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்குழு சேர்மனாக இருந்தார். எனவே, நடைபெற்ற தேவையற்ற குளறுபடிகளுக்கு அவரும் ஒரு காரணமாகி விட்டதாகவும், குலாம்நபி ஆசாத் அகில இந்திய பொதுச்செயலர் போல நடந்து கொள்ளாமல் தங்கபாலுவின் ஆதரவாளர் போல நடந்து கொள்கிறார். எனவே, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் புகார்கள் வந்துள்ளன. தங்கபாலுவை மாற்றுவது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. அனேகமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆண்டு மே 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. தவிர ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படுமென, பிரதமர் ஏற்கனவே அறிவித்தும் உள்ளார்.அதனுடன் சேர்த்து கட்சி நிர்வாகிகள் மாற்றமும் இருக்கும். அந்த சூழ்நிலையில் தமிழக காங்கிரசும் கவனத்தில் கொள்ளப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நான்கு பேரா? மயிலாப்பூரில் நான்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததாக தங்கபாலு தரப்பில் கூறப்பட்டது. ஒவ்வொரு மனுவுக்கும் தேர்தல் அதிகாரி ஒரு ரசீது வழங்குவார். அப்படியானால், அவர் கூறியபடி நான்கு ரசீதுகளை அவர் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். மயிலாப்பூர் விவகாரம் குறித்து மேலிடம் கேட்ட போது, அவர் இரண்டு ரசீதுகளை மட்டுமே காட்டியுள்ளார். கடைசி வரை அவர், மற்ற இரண்டு ரசீதுகளை காட்டவில்லை. இது சந்தேகத்தை கிளப்பவே, மனு பூர்த்தி செய்ய உதவியதாக குறிப்பிடப்படும் வக்கீலிடம் விசாரிக்க வேண்டுமென கேட்டும், கடைசி வரை அந்த வக்கீலும் மேலிடத்தின் கண்ணில் காட்டப்படவே இல்லையென்றும் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *