சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் திருச்சி விரைகிறார்.
சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் இன்றுகாலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மறைவால் அதிமுகவினர் சோகமடைந்துள்ளனர். மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மரியம் பிச்சையின் மறைவு குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். மரியம் பிச்சையின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவர் இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் திருச்சி விரைகிறார். முதல்வர் அஞ்சலி செலுத்திய பின்னர் பாலக்கரையில் உள்ள பள்ளிவாசலில் மரியம் பிச்சையின் உடல் அடக்கம் செய்யப்படும்.
டிரைவரைப் பிடித்து போலீஸ் விசாரணை
இதற்கிடையே, மரியம் பிச்சையின் கார் டிரைவர் ஆனந்தனைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோர விபத்தில் அமைச்சர் மட்டுமே பலியாகியுள்ளார். அவரது உடல் நசுங்கிப் போய் விட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தன் ஒரு காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
ஆனந்தன் சென்னை முகப்பேரைச் சேர்ந்தவராவார். அவரிடம் போலீஸார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply