மாணவர்களுக்கு இலவச “லேப்-டாப்’: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, “லேப்-டாப்’ வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, இந்த கணக்கெடுப்பு நடைபெறும். அதனடிப்படையில், வரும் டிசம்பருக்குள், 14 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக, “லேப்-டாப்’ வழங்கப்பட உள்ளன.

சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், இலவசமாக, “லேப்-டாப்’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ள நிலையில், “தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும், ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்’ என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார். இதனால், துறை வாரியாக நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவச, “லேப்-டாப்’ வழங்கும் திட்டம் குறித்து, நேற்று முன்தினம், சென்னையில் நடந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விரிவாக ஆய்வு செய்தார். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அமலில் இருக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஜூன் முதல், ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களுக்கு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இது முடிந்தபின், மாவட்ட வாரியாக பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், மாணவியர் குறித்த விவரங்களை கணக்கெடுத்து அளிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் நிதிச் செலவுகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும், “லேப்-டாப்’கள் தரமான நிறுவனத்திடம் இருந்து வாங்குவது குறித்தும், ஆராயப்பட்டன. மேலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. கடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் எழுதினர். வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பில் ஏழரை லட்சம் மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான புள்ளி விவரம், ஆகஸ்ட் இறுதியில் தெரியவரும். எனினும், 14 லட்சம் பேருக்கு இலவச, “லேப்-டாப்’கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோல், உயர் கல்வித்துறை சார்பாகவும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச, “லேப்-டாப்’கள் வழங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *