சிகாகோ : அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்து வரும் மும்பைத் தாக்குதல் பற்றிய வழக்கில், நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லி, ஐ.எஸ்.ஐ.,க்கும், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.
அதை உறுதி செய்யும் விதத்தில், பாக்., ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இருவர் மற்றும் வேறு சிலரின் தொலைபேசி எண்கள் கொண்ட ஹெட்லியின் சிறு டைரி நேற்று கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
மும்பைத் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளான டேவிட் கோல்மென் ஹெட்லியும், 50, அவரது நண்பர் தகாவுர் ராணாவும், 50, 2009 அக்டோபர் 18ம் தேதி சிகாகோவில் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கு விசாரணை நேற்று முன்தினம் முதல் சிகாகோவில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ராணாவின் சக குற்றவாளியும், மும்பைத் தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியுமான டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடந்தது.
அதில் ஹெட்லி கூறியதாவது:கடந்த 2002 முதல் 2005 வரை லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பில் நான் பயிற்சி பெற்றேன். காஷ்மீரை மீட்கும் போரில் நான் பங்கு பெற வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அப்போது, ஒரு மசூதியில், ஓய்வு பெற்ற பாக்., ராணுவ அதிகாரி ஒருவர் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.கடந்த 2006ல், பாக்., உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ., அதிகாரியான மேஜர் இக்பால் என்பவரையும் நான் சந்தித்தேன்.எனது கனவுக்கு மாற்றாக, மும்பையைப் பற்றிய பல்வேறு தகவல்களை உளவறிந்து சொல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதற்கான நிதியுதவியும் ஏற்பாடு செய்து தந்தார்.அப்போதுதான் லஷ்கர் -இ- தொய்பாவும், ஐ.எஸ்.ஐ.,யும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு வேலை செய்து வருகின்றனர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் வருவதற்காக எனது பெயரை தாவூத் கிலானி என்று மாற்றிக் கொண்டேன். புதிய பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டேன்.லஷ்கர் -இ- தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீத் , “ஜிகாத்’ தில் என்னை ஈடுபடும்படி ஊக்குவித்தார். “ஜிகாத்’தில் ஒரு நிமிடத்தில் கிடைக்கும் திருப்தி, 100 ஆண்டுகளில் செய்யும் பிரார்த்தனைகளுக்குச் சமம் என்று கூறினார்.மும்பையில் நான் இருந்த போது என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, இந்தியர்கள் யாருடனும் நெருங்கிப் பழகவில்லை.மும்பையின் முக்கிய இடங்களைப் பற்றி நான் எடுத்த வீடியோக்களை லஷ்கர் மற்றும் ஐ.எஸ்.ஐ.,யிடம் கொடுத்தேன்.இவ்வாறு ஹெட்லி தெரிவித்தார்.
விசாரணையின் போது தகாவுர் ராணாவின் வக்கீல் கூறியதாவது:ஹெட்லி, ராணாவை வஞ்சித்துள்ளார். அவர் பயங்கரவாத இயக்கத்தில் இருந்து செயல்பட்டது ராணாவுக்குத் தெரியாது. பாகிஸ்தானின் ராணுவப் பள்ளியில் தன்னுடன் படித்தவர் என்பதால் ஹெட்லியை, ராணா நம்பி விட்டார்.ஆயுள் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக இதற்கு முன்பும் ஹெட்லி, குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கூறியுள்ளார். ஹெட்லி, அமெரிக்காவின் போதை மருந்து தடுப்புத் துறையில் பணியாற்றிய படியேதான், லஷ்கர் மற்றும் ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.தன்னுடைய மூன்று மனைவிகளுடன் அவர் எப்படி வாழ்ந்தாரோ அதேபோல்தான் இந்த மூன்று அமைப்புகளுடனான தனது தொடர்புகளையும் அவர் வைத்திருந்தார்.இவ்வாறு ராணாவின் வக்கீல் தெரிவித்தார்.இவ்வழக்கில், ஹெட்லி குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்; ராணா மறுத்துள்ளார்.
டைரியில் முக்கிய எண்கள்: இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையில், ஹெட்லி தன் கைப்பட எழுதிய இரண்டு பக்கங்களைக் கொண்ட சிறு டைரி ஒன்று கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.அதில், ஹெட்லி ஏற்கனவே குறிப்பிட்ட மேஜர் இக்பால் மற்றும் மேஜர் எஸ்.எம்.,(அனேகமாக சாஜித் மிர் என்ற பெயரைக் குறிக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன) என்ற பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இருவரின் தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டுள்ளன.அதேபோல், ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் மக்கி உள்ளிட்ட சிலரின் பெயர்களும் உள்ளன. இவர் ஹபீஸ் சயீத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளவர்.மேலும், துபாயைச் சேர்ந்த இருவரின் எண்களும் அதில் உள்ளன. டைரியில் குறிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்.ஐ.எஸ்.ஐ.,க்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை ஹெட்லி வெளிப்படுத்தியுள்ளதால் பாக்.,ன் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
Leave a Reply