சேலம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே 20ம் தேதிக்கு மேல், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும்&’&’ என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கல்விக்குழு அமைக்கப்பட்டு, மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என கடந்த வாரம் மெட்ரிக் பள்ளி இயக்குனர் தேவராஜன் அறிவித்திருந்தார். கல்விக்குழு அமைப்பு துவக்கவிழா மற்றும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழா, சேலம் பாலபாரதி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 50 மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் வழங்கல் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தன.
இவற்றில், 38 பள்ளிகளுக்கு புதுப்பித்தலும், ஒரு பள்ளிக்கு புதிய அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மெட்ரிக் பள்ளி இயக்குனர் தேவராஜன், பள்ளி நிர்வாகிகளிடம் அங்கீகார ஆணைகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, “அங்கீகாரம் வழங்கல் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தவர்களில், 39 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் மனுக்கள், முறையாக லேப், கட்டடம், கழிப்பிடம், போதிய இடவசதி, மைதானம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின், 32 மாவட்டங்களிலும் முதல்கட்ட பரிசீலனை கூட்டம் முடிந்தபின், மீண்டும் இவர்களது மனுக்களை மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும். அதற்குள் உரிய வசதிகள், பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும், புதுப்பிக்காத, 246 பள்ளிகளுக்கு மீண்டும் இரண்டாம் கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் மெட்ரிக் பள்ளிகளுக்கு, தமிழ் பாடப்புத்தகம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. நடப்பாண்டில் சமச்சீர் கல்விமுறை அறிமுகப்படுத்தப்படுவதால், அனைத்து பாடப்புத்தகங்களும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது. அனைத்து பள்ளிகளிடமும், தேவையான புத்தக விவரம் குறித்த “இன்டென்ட்” கேட்கப்பட்டுள்ளது. இதன்படி, மே 20ம் தேதிக்கு மேல் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் வினியோகிக்கப்படும்.
இதுவரை தனியார் புத்தகங்களுக்கு, தமிழக அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. தனியார் புத்தகங்களை வினியோகிக்கும் பள்ளிகள் முழு பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நடப்பாண்டில் மெட்ரிக் பள்ளிகளுக்கு, 30 லட்சம் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே ஆசிரியர் குழு அமைக்கப்பட்டு, அப்பாடப் புத்தகத்தில் உள்ள தவறுகளை கண்டறிந்து பள்ளி திறக்கும் முன் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
Leave a Reply