இஸ்லாமாபாத்: பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்றது போல தாங்களும் செய்ய நினைத்தால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். பேரழிவாக அது முடியும் என்று பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.
பின்லேடன் மீதான தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் மற்றும் விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக் ஆகியோர் கூறுகையில், அமெரிக்கா எப்படி பின்லேடனை போட்டுத் தள்ளியதோ, அதேபோல செய்ய இந்தியாவிடமும் பலம் உள்ளது என்று கூறியிருந்தனர்.
இதனால் பாகிஸ்தான் கடுப்பாகியுள்ளது. இந்தியாவின் இந்த சவால் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானி தலைமையில் நடந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ராணுவத் தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில்,
அபோதாபாத் சம்பவம் போல இனி ஒரு சம்பவம் நடக்க அனுமதிக்க மாட்டோம். எந்த நாடும் தங்கள் இஷ்டத்திற்கு பாகிஸ்தானுக்குள் வந்து போக அனுமதிக்க முடியாது. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
அமெரிக்கா மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்தால் அதனுடன் இருந்து வரும் உளவுத் தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை நிறுத்தி விடுவோம். அதேபோல பாகிஸ்தானில் இருந்து வரும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைத்து விடுவோம்.
இந்திய ராணுவத் தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் கடுமையானவை. அதேசமயம், இதுபோன்று நடக்க அவர்கள் முயற்சித்தாலோ அல்லது கருதினாலோ கூட அவற்றை மிகக் கடுமையாக எதிர்கொண்டு அழிப்போம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் பதில் மிகக் கடுமையானதாக இருக்கும், பேரழிவுக்கு வித்திடும். அதில் பாகிஸ்தானியர்களுக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீர் கூறுகையில், .வீரம் நிறைந்த பூமி பாகிஸ்தான். இங்கு ஏராளமான வீரர்கள் உள்ளனர். எல்லைக்கு அப்பாலிருந்து சிலர் வான் மூலமாகவும், தரை மார்க்கமாகவும் பாகிஸ்தானுக்குள் புகுந்து எதிரிகளை அழிக்க முடியும் என பேசியுள்ளனர். இந்தத் தப்புக்கணக்கை அவர்கள் கைவிட வேண்டும். அப்படி ஏதாவது செய்ய முயற்சித்தால் பேரழிவை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றார் பஷீர்.
தாவூத், ஹபீஸை அழிக்க ஆதரவு
இதற்கிடையே, அமெரிக்கா செய்தது போல இந்தியாவும் அதிரடியாக செயல்பட்டு தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத் போன்றோரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.
இந்திய எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதிக்குள் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்களை அழிக்க முன்பு இந்தியா திட்டமிட்டு வந்தது. இருப்பினும் பாழாய்ப்போன அமெரிக்காவின் தலையீட்டால் அதை நிறுத்தி வைத்தது. ஆனால் இன்று அமெரிக்கா, பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து தனக்கு தேவையானதை மட்டும் சாதித்துக் கொண்டு கப்சிப்பென போய் விட்டது.
இந்த நிலையில் அமெரிக்கா செய்ததைப் போலவே இந்தியாவும் செயல்பட்டு தனக்கு பிரச்சினை கொடுத்து வரும் நபர்களையும், தீவிரவாத முகாம்களையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியர்களிடையே பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply