புதுச்சேரி:புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி, ஒரு ஆண்டு கூட நிலைக்காது என, அ.தி.மு.க., நிர்வாகிகள்
கூட்டத்தில் மாநில செயலர் அன்பழகன் கூறினார்.
புதுச்சேரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொகுதி செயலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், அவைத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில செயலர் அன்பழகன் பேசியதாவது:என்.ஆர்.காங்., உடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, ஆளும் காங்., கட்சி மற்றும் கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் வகையில் பிரசாரம் செய்தோம். இதன் மூலம் முன்னர் ஏழு எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருந்த தி.மு.க., தற்போது இரண்டு இடங்களில் மட்டுமேவெற்றி பெற்றது.
இதேபோல், அசுர பலத்துடன் இருந்த காங்., கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை இழந்தது.நானும், ஓம்சக்தி சேகரும், என்.ஆர்.காங்., கூட்டணி அமைக்க பாடுபட்டோம். அவர் பற்றி ஜெ.,விடம் நாங்கள் நல்ல கருத்துக்களை தெரிவித்தோம். ஆனால், இன்று அவர் செய்த செயல், ஜெ.,விடம் வெட்கப்பட்டு நிற்கும் நிலைமையை ஏற்படுத்தியது. நாங்கள் ஏமாறலாம். ஆனால், ஜெ., அளவில் ஏமாறுவதற்கு நாங்கள் காரணமாக இருந்துவிட்டோமே என்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. தேர்தலுக்கு பிறகு ரங்கசாமி துரோகம் செய்து விட்டார்.ஜெ., கூறியபடி நாங்கள்(அ.தி.மு.க.,) புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
இந்த காலகட்டத்தில் நாம் பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கேற்றவாறு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு தயாராக இல்லாத நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து விலகி, கட்சி உறுப்பினராக தொடரலாம். புதுச்சேரியிலுள்ள 23 தொகுதிகளில் தகுதியானவர்களை தேர்வு செய்து அதற்கேற்றவாறு பணியாற்ற வேண்டும்.இந்த ஆட்சி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடிக்காது. துரோகத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டடம் அதிக நாள் நீடிக்காது. ரங்கசாமி ஆட்சி, எதிர்ப்பின் காரணமாக ஒரு ஆண்டு கூட நிலைக்காது.
வருங்காலத்தில் அ.தி.மு.க., தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவில் நாம் பணியாற்ற வேண்டும்.நம் கட்சியைச் சேர்ந்த பலர், ரங்கசாமி படத்துடன் நன்றி போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அவர் படத்தை போட்டு போஸ்டர் ஒட்டினால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர். ஜெ., படத்தைத் தவிர வேறு எந்த படத்தையும் போட்டு போஸ்டர் அடிக்கக் கூடாது.காங்., – தி.மு.க., மற்றும் என்.ஆர்.காங்., கட்சியை விட அ.தி.மு.க., மக்கள் சக்தி மிகுந்த இயக்கமாகும். குறுகிய காலத்தில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.இவ்வாறு அன்பழகன் பேசினார்
Leave a Reply