மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சன் “ஆல்-ரவுண்டராக’ ஜொலிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் தனது கடைசி ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்ற ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்ன் வெற்றியுடன் விடைபெற்றார்.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 66வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. “டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் சச்சின் “பேட்டிங்’ தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
மும்பை அணி வாட்சன் பந்துவீச்சில் திணறியது. இவரது வேகத்தில் முதலில் சுமன்(5) வெளியேறினார். தனது அடுத்த ஓவரில் ராயுடுவை(2) அவுட்டாக்கிய வாட்சன் இன்னொரு “அடி’ கொடுத்தார். அப்போது 2 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து தவித்தது.
ரோகித் அரைசதம்:
பின் சச்சின், ரோகித் சர்மா இணைந்து நிதானமாக ஆடினர். அமித் சிங் பந்தில் சச்சின்(31) வீழ்ந்தார். தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோகித் சர்மா, அமித் சிங் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார். மறுபக்கம் மனேரிய ஓவரில் போலார்டு அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடிக்க, ஸ்கோர் உயரத் துவங்கியது. இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த வாட்சன், போலார்டை(20) போல்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். வார்ன் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட ரோகித் சர்மாவின் பேட் பறந்து போனது. இதனை பயன்படுத்திய கீப்பர் பினல் ஷா “ஸ்டம்பிங்’ செய்ய, சர்மா 58 ரன்களுக்கு அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 133 ரன்கள் மட்டும் எடுத்தது. பிராங்க்ளின்(11), ஹர்பஜன்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் வாட்சன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
அசத்தல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு வாட்சன் அதிரடி துவக்கம் தந்தார். மும்பை அணியின் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர் பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தார். ஹர்பஜன் ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்களை விளாசினார். மலிங்காவின் ஓவரில் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, ஸ்கோர் “ஜெட்’ வேகத்தில் பறந்தது. தொடர்ந்து குல்கர்னி ஓவரிலும் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். மீண்டும் பந்துவீச வந்த ஹர்பஜன் ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்து அசத்தினார் வாட்சன். மறுபக்கம் அடக்கி வாசித்த டிராவிட், போலார்டு ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார். பிராங்க்ளின் பந்தில் டிராவிட் ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, ராஜஸ்தான் அணி 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து, தொடரை வெற்றியுடன் நிறைவு செய்து ஆறுதல் தேடியது. வாட்சன் 89(9 பவுண்டரி, 6 சிக்சர்), டிராவிட் 43(6 பவுண்டரி)ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை வாட்சன் வென்றார்.
இப்போட்டியில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனது அடுத்த போட்டியில்(மே 22) கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தினால் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு எவ்வித பிரச்னையும் இல்லாமல் முன்னேற முடியும்.
கிரிக்கெட்டுக்கு “குட்பை’
கிரிக்கெட் அரங்கில் இருந்து முழுமையாக விடைபெற்றார் ஜாம்பவான் ஷேன் வார்ன்(41). ஆஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த சுழற்பந்துவீச்சாளரான இவர் 145 டெஸ்டில் 708 விக்கெட், 194 ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடந்த 2007ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின் 2008ல் உள்ளூர் ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2008ல் அணிக்கு கோப்பை பெற்று தந்தார். நேற்று தனது கடைசி ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்ற இவர், கிரிக்கெட் அரங்கில் இருந்து பிரியாவிடை பெற்றார். இவருக்கு சக வீரர்கள் இருபுறமும் நின்றவாறு மரியாதை அளித்தனர்.
———
“மெகா’ வெற்றி
இத்தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது. ஐ.பி.எல்., வரலாற்றில் டெக்கான்(எதிர், மும்பை, 2008), டில்லி(எதிர், பஞ்சாப், 2009), பெங்களூருவை(எதிர், ராஜஸ்தான், 2010) தொடர்ந்து 10 விக்கெட்டில் வெற்றி பெறும் நான்காவது அணியாகிறது
ராஜஸ்தான்.
ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
சுமன்(கே)மனேரியா(ப)வாட்சன் 5(6)
சச்சின்(கே)வாட்சன்(ப)அமித் சிங் 31(35)
ராயுடு(கே)டெய்லர்(ப)வாட்சன் 2(8)
ரோகித்(ஸ்டம்)ஷா(ப)வார்ன் 58(47)
போலார்டு(ப)வாட்சன் 20(18)
பிராங்க்ளின்-அவுட் இல்லை- 11(5)
ஹர்பஜன்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 5
மொத்தம்(20 ஓவரில் 5 விக்.,) 133
விக்கெட் வீழ்ச்சி: 1-7(சுமன்), 2-17(ராயுடு), 3-65(சச்சின்), 4-118(போலார்டு), 5-131(ரோகித்).
பந்துவீச்சு: சவான் 4-0-17-0, வாட்சன் 4-0-19-3, திரிவேதி 1-0-9-0, வார்ன் 4-0-30-1, போத்தா 4-0-24-0, அமித் சிங் 2-0-20-1, மனேரியா 1-0-12-0.
ராஜஸ்தான் ராயல்ஸ்
வாட்சன்-அவுட் இல்லை- 89(47)
டிராவிட்-அவுட் இல்லை- 43(32)
உதிரிகள் 2
மொத்தம்(13.1 ஓவரில் 0 விக்.,) 134
பந்துவீச்சு: முனாப் 3-0-23-0, ஹர்பஜன் 2-0-27-0, மலிங்கா 4-0-42-0, குல்கர்னி 2-0-19-0, போலார்டு 2-0-19-0, பிராங்க்ளின் 0.1-0-4-0.
Leave a Reply