ஹைதராபாத்: டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் வீரேந்திர ஷேவாக் போட்ட அபாரமான சதத்தால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
ஹைதராபாத்தில் நேற்று டெல்லி அணிக்கும், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிக மிக விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், முதலில் ஆடிய டெக்கான் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களைக் குவித்தது.
அந்த அணியின் டுமினி 55, சங்கக்காரா 44, கிறிஸ்டியன் 27, தவான் 29 என குவித்து அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவினார்.
சவாலான இந்த ஸ்கோரை துரத்தக் களம் இறங்கிய டெல்லி அணியில் ஓப்பனர்களாக ஷேவாக்கும், பின்ச்சும் இறங்கினர். பின்ச் டக் அவுட் ஆகி வெளியேற ஷேவாக்குடன் இணைந்தார் ஓஜா. ஆனால் அவரும் 7 ரன்களில் வீழ்ந்தார். வேணுகோபால ராவும் 3 ரன்களில் கிளம்பினார். பர்ட் 4 ரன்கள் என அவுட்டாக டெல்லி சிக்கலில் தவித்தது.
ஆனால் தனி மனிதராக பட்டையைக் கிளப்பினார் ஷேவாக். தனக்கு எதிர் முனையில் வரிசையாக பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து சென்றபடி இருக்க, ஷேவாக் சற்றும் தளராமல் தன்னை நோக்கி வந்த பந்துகளையெல்லாம் பவுண்டரிகளுக்கு விளாசினார்.
மொத்தம் 13 போர்களையும், 6 சிக்சர்களையும் விளாசிய ஷேவாக் 56 பந்துகளில் 119 ரன்களைக் குவித்தார். அவரது இந்த அபாரமான ஆட்டத்தால் ஆட்டம், டெல்லி அணியின் கட்டுக்குள் வந்தது. கடைசியில் ஜேம்ஸ் ஹோப்ஸும், நகரும் சேர்ந்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்தனர்.
Read: In English
வீரேந்திர ஷேவாக் பொறிந்து தள்ளியதைப் பார்த்த டெக்கான் பந்து வீச்சாளர்கள் மலைத்துப் போய் விட்டனர். ஸ்டேடியத்திலே உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரில் தனது நிலையை சற்றே பலப்படுத்தியுள்ளது டெல்லி.
Leave a Reply